உலகம் முழுவதும் சமூக வலைதளங்கள் ஏற்படுத்திவரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்துவருகிறோம், குறிப்பாக அரசியல் அரங்கில். சர்வதேச அளவில் அரசியலை ஒரு புதிய காலகட்டத்துக்குள் சமூக வலைதளங்கள் தள்ளிவரும் சூழலில், தமிழகத்திலும் அது எதிரொலிக்கிறது. ஜல்லிக்கட்டை முன்வைத்து தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ‘2017 தை எழுச்சிப் போராட்டம்’ இங்கு நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கான ஒரு வெளிப்படைச் சான்று. ஜனநாயகமான விவாதங்கள் மக்களிடத்தில் அரசியலுணர்வை எப்படி வளர்த்தெடுக்கின்றன என்பதை இப்போராட்டம் வெளிப்படுத்தியது. இளைஞர்களிடம் சமூக வலைதளங்கள் நன்மைகளை மட்டும் கொண்டுவந்து சேர்க்கவில்லை; நிறைய பிரச்சினைகளையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. என்றாலும், அவற்றைப் பற்றியும் நாம் அவர்களிடம்தான் பேச வேண்டும். அதற்கு அவர்களுடனான உரையாடல் முக்கியம். அவர்களுடைய மொழி முக்கியம்.
பன்பரிமாணங்களைக் கொண்ட இந்தப் போராட்டத்திலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்புகளும் கற்றுக்கொள்ள நூற்றுக்கணக்கான விஷயங்கள் இருக்கும் நிலையில், ஒரு ஊடகமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் கற்றுக்கொள்ள நிறையப் படிப்பினைகள் இருப்பதாகக் கருதுகிறது. இளைஞர்களிடம் உரையாட ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும் நிலையில், அவர்களோடு பேசுவதற்கேற்ப ‘தி இந்து’ தன்னை மேலும் எளிமைப்படுத்திக்கொள்ள விழைகிறது.
தமிழில் முழுப் பக்கக் கட்டுரைகள், பேட்டிகளைத் தொடர்ந்து வெளியிடும் கலாச்சாரத்தைத் தொடக்கிவைத்து, வெற்றிகரமாக அவற்றை வாசகப் பரப்பிலும் கொண்டுசேர்க்கும் பத்திரிகை ‘தி இந்து’. அது எவ்வகையிலும் பாதிக்கப்படாது. வழக்கம்போல புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் பெருங்கட்டுரைகள், முழு நீளப் பேட்டிகள் வெளியாகும். ஆனால், கணிசமான இளைஞர் கூட்டம் இன்று நொடி வாசிப்புக் கலாச்சாரத்தில் சிக்கியிருக்கும் நிலையில், அவர்களை வளர்த்தெடுக்க, அவர்கள் மத்தியில் நிமிடக் கட்டுரைகளினூடே இனி புழங்க முற்படுகிறோம். படிப்படியாக அவர்களை மணி வாசிப்பு, நாள் வாசிப்பு என்று நிதான வாசிப்பு நோக்கி அழைத்து வருவதே நோக்கம் என்றாலும், முதலில் அவர்களோடு கை கோப்பது நம்முடைய சமூகக் கடமை என்று கருதுகிறோம்.
ஆகையால், சமகாலத் தமிழ்ச் சமூகத்தில் உரையாடல் வெளியாக உருவெடுத்திருக்கும் ‘தி இந்து’வின் நடுப்பக்கங் கள் இனி இளைஞர்களுடனான உரையாடலுக்கு மேலும் கூடுதல் கவனம் அளிக்கும். கட்டுரைகள், பதிவுகள் மேலும் எளிமையாகவும் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றப் படும். இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரிக்கப்படும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் சிறப்பான கருத்துகளைத் தேடிப் பிரசுரம் செய்துவரும் ‘தி இந்து’, இனி பதிவர்கள் நேரடி யாகவே தம் பதிவுகளை ‘தி இந்து’வுக்கு அனுப்ப வழிவகை செய்கிறது. அதன்படி, inaiyakalam@thehindutamil.co.in மற்றும் editpage@thehindutamil.co.in ஆகிய மின் னஞ்சல்களுக்கு இனி அவர்கள் தம் பதிவுகளை அனுப்பலாம். கரங்கள் கோப்போம். தமிழால் இணைவோம்!