தலையங்கம்

அரசியல் கூத்து

செய்திப்பிரிவு

தன்னுடைய சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடுகளால், அவரை ஆதரித்தவர்களை மட்டுமல்ல; ஆதரிக்க நினைப்பவர் களையும் யோசிக்கவைத்திருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.

டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, உகாண்டாவைச் சேர்ந்த சில பெண்கள்மீது, அவருடைய தொகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் நள்ளிரவு அவர்களுடைய வீடு புகுந்து அச்சுறுத்தியிருக்கிறார். போதை மருந்து கடத்தல், விபச்சாரம் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவதாக அவர்கள்மீது அப்பகுதி மக்கள் கொண்டிருந்த சந்தேகமே இந்த அத்துமீறலுக்குப் போதுமானது என்று அமைச்சர் நினைத்துவிட்டார். அத்துடன் நில்லாமல், அப்பகுதி காவல் துறை அதிகாரியை அழைத்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். காவல் துறையினர் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க யோசித்தனர்.

இதனிடையே மற்றொரு டெல்லி பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சம்பவமும் நடந்துவிட்டது. இதற்கு முன் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தை வைத்து, பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி காங்கிரஸ் அரசுக்குப் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்திய கேஜ்ரிவால், தன்னுடைய ஆட்சியிலும் அப்படி ஒரு சம்பவம் நடக்க , எழும் எதிர்ப்புக் கணைகளை மத்திய உள்துறை அமைச்சகம்மீது திருப்ப எத்தனித்து, தன்னுடைய சகாக்களுடன் உள்துறை அமைச்சரின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் சென்றார். அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அவர் தடுத்து நிறுத்தப்பட, அங்கேயே தங்கி தன்னுடைய தர்ணா கூத்தை அரங்கேற்ற ஆரம்பித்தார்.

டெல்லி காவல் துறை ஏனைய மாநிலங்களைப் போல, மாநில அரசின் அதிகாரத்துக்குக் கீழ் இருக்க வேண்டும் என்று அவர் முன்வைக்கும் கோரிக்கையில் நியாயம் இருக்கலாம். அதை முன்னெடுக்க வேண்டிய விதம் வேறு. கேஜ்ரிவால் நடத்திய போராட்டமோ முதிர்ச்சியற்றது. இதன் மோசமான விளைவுக்கான உதாரணங்களில் ஒன்று ‘ஆப்பிரிக்கர்கள் நிறவெறியோடு நடத்தப்படுகிறார்கள்’ என்ற எண்ணம் ஆப்பிரிக்க நாடுகளிடம் எழ, மத்திய அரசு ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்களை அழைத்துச் சமாதானப்படுத்த நேர்ந்தது.

குடியரசு தினம் நெருங்கும் நிலையில், அணிவகுப்பு நடைபெறும் இடத்துக்கு அருகில் நடந்த கேஜ்ரிவாலின் போராட்டம் பாதுகாப்புக்குப் பெரும் குந்தகம் விளைவிக்கும் என்ற சூழலைச் சுட்டிக்காட்டியபோது, “குடியரசு தின அணிவகுப்பு என்பது ஒரு பொழுதுபோக்குதான்” என்று பிதற்றியிருக்கிறார் கேஜ்ரிவால். இந்த நாட்டின் விழுமிய அடையாளங்களே வெறும் பொழுதுபோக்குகள்தான் என்றால், இவர்களுடைய அரசியல் சித்தாந்தம், கொள்கைகள், கண்ணோட்டம் தான் என்ன? இன்னமும் அதையே தீர்மானிக்க முடியாமல் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அரசியலை என்னவென்றுதான் நினைக்கின்றனர்?

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் என்பது மக்களின் பிரச்சினை களை விவாதித்துத் தீர்வு காண்பதற்கான களமே தவிர, கூத்து மேடை அல்ல. அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் அவருடைய சகாக்களுக்கும் காரியங்களைவிட விளம்பர வெளிச்சம்தான் முக்கியமாகப் படுகிறது என்றால், அவர்கள் ரொம்ப சீக்கிரம் காலாவதியாகிவிடுவார்கள்.

SCROLL FOR NEXT