வெனிசுலாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செல்லாது எனும் தனது முந்தைய உத்தரவைத் திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குச் சற்று ஆசுவாசம் அளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை ரத்துசெய்யும் முந்தைய உத்தரவு, அதிபர் நிகோலஸ் மதுரோவின் விருப்பத்துக்கு இணங்கவும் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைந்தது. அத்துடன், நீதித் துறையின் சுதந்திரம் மீதான நம்பகத்தன்மையையும் தகர்த்தது. அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாடுகளும் அந்த உத்தரவைக் கடுமையாக விமர்சித்திருந்தன.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக முதலில் குரல் எழுப்பியவர் அரசு வழக்கறிஞர்தான். அந்த உத்தரவு அரசியல் சட்டத்துக்குச் சேதம் விளைவிக்கும் நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார். உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு, முந்தைய தவறைச் சரிசெய்யும் நடவடிக்கை என்று வெனிசுலா தகவல் துறை அமைச்சர் தெரிவித்திருந்தாலும், அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் இப்போதைக்கு முடியக்கூடியதாகத் தெரியவில்லை.
2015-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையைப் பெற்றன. இந்த அளவுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பது என்பது, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் நீதிபதிகளை நியமிப்பதற்கும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கக் கூடிய அம்சம். 2016 ஜனவரியில் அதிபர் நிகோலஸ் மதுரோ கொண்டுவந்த பொருளாதார நெருக்கடி நடவடிக்கையை, பெரும்பான்மை பலம் பெற்ற நாடாளுமன்றம் எதிர்த்தது.
இதற்கிடையே, வெனிசுலாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாடு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். கடந்த அக்டோபரில் பார்லோவென்டோ மாகாணத்தில் ஒரு இளைஞர் ராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசு அதிகாரிகளே இந்தச் செயலைக் கண்டித்தனர்.
அரசை எதிர்க்க அரசியல் நிலைப்பாடுகளையும், அரசியல் சட்டரீதியான வழிமுறைகளையும் முடிந்தவரை பயன்படுத்திப் பார்த்துவிட்டன. நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தி, மக்களின் ஆதரவைத் திரட்டலாம் என்று எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சியும் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்கவே மறுக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ, அவற்றுக்குத் தீர்வு காண முன்வருவார் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய அறிவிப்பு அதிபரின் வானளாவிய அதிகாரத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. சர்வதேச அளவில் தரப்பட்ட அழுத்தமும் இதற்கு முக்கியக் காரணம். ஐ.நா.வுக்குச் செலுத்த வேண்டிய பல மில்லியன் டாலர் கடன் தொகையைச் செலுத்தாமல் இருப்பதால், ஐ.நா. பொதுச் சபையில் வாக்களிக்கும் தகுதியை இழந்திருப்பது வெனிசுலாவுக்கு மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தீர்வதற்கு அதிபரும் எதிர்க்கட்சிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்!