மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அந்த மாநிலத்தின் புதிய அரசியல் போக்கைத் துல்லியமாகக் காட்டுகின்றன. பிருஹண் மும்பை மாநகராட்சியில் சிவசேனை, பாஜக கிட்டத்தட்ட சமமான இடங்களில் வென்றிருக்கின்றன. தாணே மாநகராட்சியில் மட்டும் சிவசேனை கட்சிக்குப் பெரும்பான்மை இடங்கள் கிடைத்திருக்கிறது. ஏனைய எல்லா மாநகராட்சிகளிலும் பாஜகவே வென்றிருக்கிறது.
1,268 இடங்களில் 628 இடங்களை வென்று, 2012 உள்ளாட்சித் தேர்தலில் அது பெற்ற இடங்களை மூன்று மடங்காகப் பெருக்கிக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை இடங்களில் அடுத்த நிலையிலும் சிவசேனையே வந்திருக்கிறது. காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் பெருத்த அடி வாங்கியிருக்கின்றன.
சிவசேனை கட்சி மராட்டியர்கள் அதிகம் வசித்த தொகுதிகளில் மட்டுமே பெருமளவில் வென்றிருக்கிறது. இம்முறை போட்டியிட்ட இடங்களில் வெறும் 37%-ல் மட்டுமே அது வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த தேர்தல்களில் 50%-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவந்த கட்சி அது. 25 ஆண்டுகளாக அது கையில் வைத்திருந்த பிருஹண் மும்பையிலேயே அதன் செல்வாக்கு அடிவாங்கியிருக்கிறது. ‘மும்பையை இனியும் தன்னுடைய கோட்டை என்று சிவசேனை கூறிக்கொள்ள முடியாது’ என்ற சூழல் பாஜக சிவசேனை இடையேயான போட்டி அரசியலை இன்னும் கூர்மையாக்கும்.
சண்டிகர், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் கிடைத்த வெற்றிகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரத்தில் கிடைத்துள்ள வெற்றி பாஜகவுக்குத் திருப்தியை அளித்திருக்கும். இந்த முடிவுகளைக் கொண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று அக்கட்சியைச் சேர்ந்த சிலர் பிரச்சாரம் செய்வது சரியல்ல. ஆனால், அதைக் காட்டிலும் அபாயகரமான ஒரு செய்தியை இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குத் தந்திருக்கின்றன. மோடியைத் தாண்டியும் உள்ளூர் அளவில் கட்சியைத் தொடர்ந்து பாஜக வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதே அது.
உள்ளூர் அளவிலும் பாஜக ஆழ வேர் பரப்பிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் வெற்றியுடன் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை ஒப்பிடாமல் இருக்க முடியாது. காங்கிரஸுக்குப் பல்லாண்டுகளாக இருந்த நடுநாயகமான பீடம் இப்போது பாஜக வசம் போய்க்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார உத்தி முதல் எல்லாவற்றிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ். தன்னிடமிருந்த வலுவான வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியதுடன் வலுவற்ற தொகுதிகளில் அப்பகுதியிலேயே செல்வாக்கான வேட்பாளர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரையும் வருந்தி அழைத்துப் போட்டியிடச் செய்து வெற்றியை வசப்படுத்திக்கொண்டிருக்கிறது பாஜக.
சிவராஜ் சிங் சௌகான், வசுந்தரா ராஜே வரிசையில் தேவேந்திர பட்நவிஸும் இப்போது வலுவான பாஜக மாநிலத் தளகர்த்தர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய தலைவர்களைக் கண்டெடுத்து வளர்த்தெடுக்காமலும், புதிய உத்திகளின் தேவைகளையும் அறியாமல் புலம்பிக்கொண்டு இருப்பதில் என்ன பயன்?