திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளில் தன்னைச் சந்திக்க வரும் தொண்டர்கள் தனக்கு சால்வைகள் போர்த்த வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று மார்ச் 1-ம் தேதியன்று அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் ஆளுக்கொரு புத்தகத்துடன் ஸ்டாலினைச் சந்தித்துப் பிறந்த நாள் பரிசை அளித்திருக்கிறார்கள். அறிவாலயம் அதன் பெயருக்கேற்ப புத்தக வாசனையால் அன்று திக்குமுக்காடியது. அன்று மட்டும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் புத்தகங்கள் குவிந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்போவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வாசிப்பை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவை திராவிட இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும். ‘திராவிட மறுமலர்ச்சி மன்றம்’, ‘திராவிட இன எழுச்சி மன்றம்’ என்று ஆரம்பித்த வாசிப்பு இயக்கத்தை திமுக பட்டிதொட்டியெங்கும் பரப்பியது. பேருந்து நிறுத்தங்கள் தொடங்கிப் பல்வேறு இடங்களிலும் ‘திராவிட நாடு’, ‘முரசொலி’ உள்ளிட்ட நாளிதழ்களை வாங்கிப்போட்டு, படிப்பகம் நடத்திய வரலாறு திமுகவுக்கு உண்டு. ‘அண்ணா படிப்பகம்’, ‘பெரியார் படிப்பகம்’, ‘உதயசூரியன் மன்றம்’ என்ற பெயர்களில் நூலகங்களும் நடத்தப்பட்டன. கிளைக் கழகங்கள் சார்பில் கட்சிக் கூட்டங்கள் நடத்துவதைப் போன்றே, படிப்பகங்கள் சார்பில் கருத்தரங்குகள் நடத்தப்பட்ட வரலாறும் உண்டு. எங்கு சென்றாலும் புத்தகத்துடன் வரும் அண்ணாவின் பிம்பம் இளைஞர்களை வாசிப்பை நோக்கி ஈர்த்தது.
வாசிப்பைத் தீவிரமாக முன்னெடுத்த திராவிட இயக்கங்கள் ஒருகட்டத்தில் வாசிப்புப் பண்பாட்டிலிருந்து விலக நேர்ந்தது துரதிர்ஷ்டமானது. கருணாநிதி, நெடுஞ்செழியன் தலைமுறைக்கு அடுத்த கட்டத் தலைவர்களிடையே வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் அதிகமில்லை. பெரும்பாலான தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் புத்தக வாசிப்பே இல்லை எனும் நிலை ஒருகட்டத்தில் ஏற்பட்டது. அரசியல் அறிவைவிட அரசியல் சாதுர்யமே பிரதானம் என்ற கருத்தியல் அரசியலில் வேரூன்றியதுதான் இதற்குக் காரணம். விளைவாக, திமுகவில் மட்டுமல்லாமல் ஏனைய இயக்கங்களிலும்கூட வாசிப்புக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
இந்தச் சூழலில் ஸ்டாலினின் முன்முயற்சி பல விதங்களிலும் நன்மை ஏற்படுத்தக்கூடியது. பல்வேறு தலைவர்களும் இதைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு அடையாளத்துக்காகப் புத்தகங்கள் வாங்க ஆரம்பிக்கும் தொண்டர்கள் அவற்றைப் படிப்பதற்கும் ஆரம்பிப்பார்கள் என்பது இன்னொரு பலன். பெரியார், அண்ணா, கருணாநிதி முதலானோரின் பிறந்த நாளுக்கும் தொண்டர்கள் புத்தகப் பரிசு அளிக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதே வழிமுறையை ஏனைய கட்சியினரும் முன்னெடுக்க வேண்டும். எல்லாக் கட்சிகளின் தொண்டர்கள் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் இருப்பதால் புத்தக வாசிப்பு பரவலாக்கப்படுவதுடன், நம் அரசியல்வாதிகளின் அறிவையும் பார்வையையும் அது மேலும் விசாலமாக்கும். புதியதோர் கலாச்சாரத்துக்கு அது வித்திடும்.