தலையங்கம்

வளர்ச்சி வேகம் தொடரட்டும்!

செய்திப்பிரிவு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது மத்தியப் புள்ளிவிவர அலுவலகம். மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் (ஜி.டி.பி.) 7.9%. அதற்கு முந்தைய காலாண்டில் இருந்த 7.2%-ஐ விடவும் இது அதிகம். இந்த வளர்ச்சி சாதிக்கப்பட்ட சூழல் கடினமானது. சரிபாதி இந்தியா வறட்சியில் துடிக்கிறது. கிராமங்களில் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இடையில்தான் இது எட்டப்பட்டுள்ளது.

இது தோராயமான மதிப்பீடுதான். சரியான மதிப்பீடுகள் வரும்போது 7.9% வளர்ச்சி 7.8% ஆகக் குறையலாம் என்று தெரிகிறது. அப்படியே குறைந்தாலும், அதற்குப் பிறகும்கூட உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிவிகிதம்தான் முதலிடத்தில் இருக்கிறது. 2014-15-ல் 7.2% ஆக இருந்த வளர்ச்சிவிகிதம் 2015-16-ல் 7.6% ஆக உயரும். இந்த உயர்வுக்கான முக்கியமான காரணம், தனிநபர்களின் நுகர்வு கணிசமாக அதிகரித்ததுதான். கடந்த ஆண்டு இதே காலத்தில் 6.2% ஆக இருந்த நுகர்வு 7.4%- உயர்ந்துள்ளது.

மத்தியப் புள்ளிவிவர அலுவலகத்தின் ஏனைய தரவுகள் பொருளா தாரம் மிதமாக முன்னேறுகிறது என்கின்றன. அடிப்படை விலைகள் மீது ‘மதிப்பு’ கூடியதால் ஏற்பட்ட வளர்ச்சி 7.2% ஆக உள்ளது. 2014-15-ல் இது 7.1% ஆக இருந்தது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி இது 7.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்த்தது. அரசு புதிதாக விதிக்கும் கூடுதல் வரிகள் அல்லது அளிக்கும் மானியங்கள் ஆகியவற்றின் விளைவு எப்படியிருக்கிறது என்று ஆராய்வதற்கு இந்த வளர்ச்சிவிகிதம் உதவுகிறது. எனவே, இது முக்கியத்துவம் பெறுகி றது. மானியங்களுக்காக அரசு செய்த செலவில் 5.6% குறைந்ததால் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இப்போதைய காலாண்டிலும் இந்த நிதியாண்டின் இறுதியிலும் பொருளாதார வளர்ச்சிவிகிதம் எப்படி இருக்கும் என்பது இனி பெய்யப்போகும் பருவ மழையைப் பொறுத்தே இருக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே வெள்ள பாதிப்பு இருக்குமா? விளைய வேண்டிய பயிர்களுக்கு இது உதவுமா, விளைந்த பயிர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துமா, எத்தனை மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும் என்பதையெல்லாம் பொருத்துத்தான் அடுத்ததாக வளர்ச்சி வேகத்தை முடிவு செய்ய முடியும்.

தனியார் நுகர்வு ஓரளவுக்கு அதிகரித்திருந்தாலும் தொழில், வர்த்தகத் துறைகளில் தனியார் முதலீடு மந்தமாகிவிட்டதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. எனவே, தனியார் முதலீட்டை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் வேலைவாய்ப்பையும் நுகர்வையும் அதிகப்படுத்தும் வகையில் செலவுகளை அதிகப்படுத்த வேண்டும்.

இதே நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியும் நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது. வட்டிவிகிதம் உள்ளிட்ட நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிக்கவிருக்கிறார். இப்போதுள்ள வட்டிவிகித அளவையே தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் முடிவுசெய்ய வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்தாலும் இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் மீட்சி தெரிகிறது. நமது பொருளாதாரம் வளர்ந்துவருகிறது என்பது உண்மைதான். ஆனால், தொழில், ஏற்றுமதி ஆகியவற்றில் பெருத்த முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதும் உண்மைதான். உள்நாட்டில் வேலைவாய்ப்பையும் தொழில் உற்பத்தியையும் அதிகப்படுத்தினால்தான் பொருளாதார வளர்ச்சிவேகம் அர்த்தமுள்ள தாகவும் நீடித்துப் பயன்தருவதாகவும் அமையும். அதற்கான நடவடிக் கைகளைத் தொலைநோக்குடன் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT