எ ப்படிப் பார்த்தாலும் சாதனை இது. செவ்வாயை ஆய்வுசெய்வதற்காக ரூ.450 கோடியில் உள்நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம் தன்னுடைய நீளமான பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுமார் 300 நாள்களில் 68 கோடி கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டிய பயணம் இது.
வேற்றுக் கிரகங்களை நோக்கிய விண்வெளிப் பயணங்கள் பெரும்பாலும் தோல்விகளையே பலன்களாகக் கொண்ட பயணங்கள். செவ்வாயை இதுவரை அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மட்டுமே தொட்டிருக்கின்றன. நம்மைவிடப் பல மடங்கு அனுபவமும் விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகளுமான ஜப்பானும் சீனாவுமே தோல்வியைத் தழுவிய பயணம் இது. 1998-ல் ஜப்பான் அனுப்பிய ‘நோசோமி’, செவ்வாயைச் சுற்றுவதற்குப் பதிலாக அதைக் கடந்து போனது. 2012-ல் ரஷ்யாவின் ‘ஃபோபோஸ்-கிரண்ட்’ பயணத்தில் தொற்றிக்கொண்டு புறப்பட்ட சீனாவின் ‘யிங்குவோ-1’ புவியின் சுற்றுப்பாதையைத் தாண்ட முடியாமல் எரிந்து அழிந்தது. இத்தகைய சூழலில்தான் ‘மங்கள்யான்’ புறப்பட்டிருக்கிறது.
விண்கலத்தைச் சுமந்து சீறிப் பாய்ந்த ‘பிஎஸ்எல்வி சி-25’ திட்டமிட்ட பாதையில், துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் தன்னுடைய முதல் கட்ட சவாலில் ‘மங்கள்யான்’ வென்றிருக்கிறது. இரண்டாவது கட்டச் சவாலை புவிவட்டப் பாதையிலான 27 நாள் பயணத்தில் அது எதிர்கொள்ளும். மூன்றாவது கட்டச் சவாலை, புவிவட்டப் பாதையிலிருந்து விலகி செவ்வாய்ப் பாதையில் அது எதிர்கொள்ளும். இந்த மூன்று கட்டச் சவால்களிலும் வெற்றிபெற்றால் 2014 செப்டம்பர் 24-ல் செவ்வாய் சுற்றுப்பாதையில் அது நிலைநிறுத்தப்படும். அங்கிருந்து செவ்வாயில் மீத்தேன், நீர்த் தடங்களைத் தேடும் ஆய்வை அது மேற்கொள்ளும். மீத்தேனும் நீரும் கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்தப் பயணத்தின் மகத்தான வெற்றியாக அமையும். இவ்வளவு சவால்களைக் கொண்ட பயணத்தில், ‘மங்கள்யான்’ இன்னொரு சவாலையும் எதிர்கொள்கிறது: ‘வெற்றுப் பெருமிதத்துக்காக ரூ. 450 கோடி செலவு தேவையா?’ என்ற விமர்சன அரசியல். ஆய்வுகளுக்காக ஒரு நாடோ அமைப்போ செலவிடும் தொகை செலவு அல்ல; முதலீடு.
இந்த நியாயத்தைத் தாண்டியும் ‘மங்கள்யான்’ இன்னொரு நியாயத்தை உள்ளடக்கியிருக்கிறது: இந்திய அறிவியல் துறையின் ‘சிக்கனப் பொறியியல்’ வியூகம். வளர்ந்த நாடுகள் பெரும் பொருட்செலவில் விண்வெளித் திட்டங்களை முன்னெடுக்கும் சூழலில், ‘இஸ்ரோ’ முன்னெடுக்கும் சிக்கன
விண்வெளித் திட்டங்களுக்கு இந்த வெற்றிகரமான ஏவல் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கும். ‘இஸ்ரோ’வின் கணக்கு வென்றால், அயல்பணி ஒப்படைப்பு முறையில், ஒப்பந்தங்களைப் பெற்று, வணிகரீதியிலான ஒரு நல்ல போட்டி யாளராகவும் அது உருவெடுக்கும். எல்லவற்றையும்விட எத்தனையோ கோடி குழந்தைகளுக்கு விண்வெளிக் கனவை இத்திட்டம் விதைக்கும்.
ஒரு பயணத்தின் வெற்றி, இலக்கை அடைதல் மட்டும்தான் என்றால் ‘மங்கள்யான்’ வெற்றியைப் பேசப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், பயணத்தின் வெற்றி இலக்கில் மட்டுமே இல்லையே?