உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் 20 சட்டப் பேரவைகளிலும் ஏற்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பது தங்களுடைய இறையாண்மையை நிராகரிப்பதாக ஆகாதா என்று சட்டமியற்றும் அதிகாரத்தைப் படைத்த நாடாளுமன்றவாதிகள் உரக்க சிந்திப்பதில் வியப்பேதும் கிடையாது. அரசியல் கட்சிகள் மத்தியில் வெவ்வேறு விவாதங்கள் நடக்கின்றன. நடக்கட்டும், நல்லதுதான்.
நீதித் துறையின் சுதந்திரத்தைக் காப்பதற்காக, ஆணையச் சட்டம் நிராகரிக்கப்படுவதாகவும் அரசியல் சட்டத்தின் அடிநாதமே நீதித் துறையின் சுதந்திரம்தான் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். சட்டத் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் இடையே நிச்சயமாக மோதல் ஏற்பட்டுவிடாது என்று விளக்கம் அளித்துள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகளை நீதித் துறைக் குழு (கொலீஜியம்) நியமிப்பதை இன்னும் எந்தெந்த வகையில் மேம்படுத்தலாம் என்ற யோசனைகள் வரவேற்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆகையால், நீதிபதிகள் அடங்கிய நீதித் துறைக் குழுவே புதிய நீதிபதிகளை நியமிக்கும்போது, அப்பதவிக்குரிய தகுதிகளைப் பெறாதவர்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதற்கான வரம்புகளை அல்லது புதிய விதிகளைச் சேர்ப்பதற்கான உகந்த சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கான பொறுப்பை நீதித் துறை, நிர்வாகத் துறை, அரசியல் துறை ஆகிய மூன்றையும் சேர்ந்தவர்கள் ஒருங்கே ஏற்க வேண்டும்.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிற கட்சிகளின் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் இதுவரை தொடங்கவில்லை. நீதித் துறையுடன் அரசு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நல்ல விஷயம். அதேசமயம், “அனைத்துத் தரப்பும் ஏற்கும்படியான தேசிய நீதித் துறை நியமன ஆணையம் அமைய மீண்டும் ஒரு முறை சட்டம் இயற்ற முற்பட்டால், அதை காங்கிரஸ் ஆதரிக்காது” என்று அது கூறியிருப்பது விநோதமாக இருக்கிறது. தேசிய நீதித் துறை நியமன ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த இதற்கு முன்னால் சட்டம் இயற்றப்பட்டபோது அதை ஆதரித்த காங்கிரஸ், இப்போது முரண்படுவது ஏனோ? தவிர, இந்த நியமன அமைப்பை மேலும் மேம்படுத்துவது எப்படி என்ற யோசனையையும் அது வெளியிடாமல் இருப்பது பழைய முறை அப்படியே நீடிப்பதைத்தான் அது விரும்புகிறதோ என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.
எது எப்படியாக இருந்தாலும், நீதிபதிகள் நியமன விஷயத்தில் தங்களுக்கே அதிகாரம் என்று நிலைநாட்டிய உச்ச நீதிமன்றமே நியமன நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கப் புதிய வழிகாட்டுநெறிகளையும் வகுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால் அதன் வரம்புக்கு உட்பட்டு நியமனங்கள் அமையும் வகையில் புதிய சட்டம் இயற்ற என்ன செய்ய வேண்டும் என்று நிர்வாகத் துறையினர் தங்களுக்குள்ளும் பிறகு நீதித் துறையின் மூத்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை கலக்க வேண்டும். யாருடைய பரிந்துரைக்கும் நெருக்குதலுக்கும் ஆட்படாதபடி இந்த நியமன முறையைப் பாதுகாக்க வேண்டும். நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் சட்ட நிபுணர்களாகவும் நேர்மையானவர்களாகவும் நடுநிலை தவறாதவர்களாகவும் இருக்க வேண்டும். வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் விதத்தில் நியமனங்கள் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்!