மக்களவையில், தெலங்கானா உருவாக்கத்துக்காக மத்திய அரசு கொண்டுவந்த ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவைத் தாக்கல் செய்யாமலும் விவாதிக்காமலும் தடுப்பதற்காக ஆந்திர மாநில உறுப்பினர்கள் கடைப்பிடித்த உத்திகளையும் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்திய ஜனநாயகத்தை மூச்சுத்திணறவைத்துக் கொல்லும் முயற்சிகளாகவே பார்க்க வேண்டும்.
தெலங்கானா மசோதாவை உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மக்களவையில் அறிமுகம் செய்தவுடனேயே, விஜயவாடா மக்களவை உறுப்பினர் எல். ராஜகோபால் ‘பெப்பர் ஸ்பிரே'யை இயக்கி, மக்களவைத் தலைவர் மீரா குமாரின் மேஜையைக் குறிவைத்து, நாலாபுறங்களிலும் மிளகுத் தூளைத் தூவியிருக்கிறார். இதை எதிர்பாராத உறுப்பினர்களின் கண்களிலும் நாசியிலும் பொடி ஏறியதால் கண் எரிச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, அப்படியே சுருண்டு விழ ஆரம்பித்திருக்கிறார்கள். மக்களவைத் தலைவர் மீரா குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, காரில் ஏறி வீட்டுக்கே போய்விட்டார். கடுமையாகப் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் அவசரச் சிகிச்சை வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், ஏனையோர் நாடாளுமன்ற வராந்தாவிலும் காற்றோட்டமான பிற இடங்களிலும் படுத்தும் உட்கார்ந்தும் நின்றும் நடந்தும் நெடியின் வீரியத்தைத் தணித்துக்கொண்டிருந்தனர்.
பெண்களைச் சீண்டுவோரிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது 'பெப்பர் ஸ்ப்ரே'. எந்த நாட்டிலும் அது இப்படிப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், கத்திகளையும் பிற ஆயுதங்களையும்கூடச் சில உறுப்பினர்கள் அவைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை எல்லாமும் பயன்படுத்தப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைக்கும்போதே பதறுகிறது. கூத்து என்னவென்றால், வங்கதேச நாடாளுமன்றத்தின் சபாநாயகர், நம்முடைய நாடாளுமன்றம் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகிறது என்று நேரில் பார்க்க வந்த நாளில்தான், இத்தனை களேபரங்கள் அரங்கேறி யிருப்பது நமக்கு எத்தகைய பெருமைகளைத் தேடித்தரும் என்று சொல்ல வேண்டியதில்லை. நாட்டையே தலைகுனிய வைத்துவிட்டார்கள்.
இந்தக் கூட்டத்தொடரில் தெலங்கானா விவகாரத்தை இந்த அளவுக்குப் பூதாகாரமாக ஆக்கி, நாடகங்கள் நடத்திய காங்கிரஸ் கட்சி, இதனால் அடையப்போகும் அரசியல் ஆதாயத்தைவிட அவமானம்தான் அதிகம். காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்று நடத்திச் செல்லும் சோனியா காந்தியும், அரசியலில் புதிய அணுகு முறையைக் கொண்டுவரப்போவதாகக் கூறும் ராகுல் காந்தியும், செயலற்ற பிரதமர் என்றால் கோபித்துக்கொள்ளும் மன்மோகன் சிங்கும் இன்னும் என்னென்ன காட்சிகளையெல்லாம் நாட்டு மக்களுக்குக் காட்டுவதற்குக் காத்திருக்கிறார்கள்? காங்கிரஸ் இப்படி யென்றால், தெலங்கானா விவகாரத்தில் பா.ஜ.க-வின் முடிவிலோ எந்தவொரு தெளிவும் இல்லை. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காத்திருப்பதுபோல்தான் தெரிகிறது.
‘வரலாறு காணாத’ அளவுக்கு நடந்த இந்தச் சம்பவங்களைப் பார்க்கும்போது, இதோடு இவையெல்லாம் ஓய்ந்துவிடும் என்று தோன்ற வில்லை. வரும் காலங்களில் அவையின் நடவடிக்கைகள் மேலும் கொடூரமாக மாறுவதற்கான முன்னோட்டம்தான் இது என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது. எல்லாக் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் இந்த வெட்கக்கேட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இது போதாது. சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அவரவர் சார்ந்த எல்லாக் கட்சிகளுமே உடனடியாக நீக்க வேண்டும்.