அருணாசல பிரதேசத்தின் தவாங் மடாலயத்துக்குச் செல்ல தலாய் லாமாவுக்கு இந்திய அரசு அனுமதி அளித்திருப்பதை சீனா விமர்சித்திருப்பது நியாயமற்றது. அதேசமயம், நீண்ட காலமாக நீள்வதும்கூட இது.
1914 சிம்லா மாநாட்டின்போதே தவாங் சர்ச்சை எதிரொலித்தது. பிரிட்டிஷ் இந்தியா, திபெத் இடையேயான அன்றைய முத்தரப்பு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடவில்லை. பின்னர், 1959-ல் திபெத்திலிருந்து தலாய் லாமா இந்தியாவுக்கு வந்தது தவாங் பகுதி வழியாகத்தான். 2009-ல் அவரது தவாங் பயணத்தின்போதும், சீனா தரப்பிலிருந்து மிரட்டல்கள் எழுந்தன. தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
பொதுவாக, அருணாசல பிரதேசம் தொடர்பான பிரச்சினைகள் இந்தியாவுடனான மற்ற உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீன அரசு நடந்துகொள்வதில்லை. சொல்லப்போனால், தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீன அரசே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்திருந்த நிலையில், தலாய் லாமாவையும் இந்தியாவையும் சீனா விமர்சித்ததன் தொடர்ச்சியாக அந்தப் பேச்சுவார்த்தை முறிவடைந்தது. ஆன்மிகத் தலைவர் எனும் முறையில், புனிதத் தலம் ஒன்றுக்கு தலாய் லாமா செல்வதை அனுமதிப்பதற்காக இந்தியாவை சீனா மிரட்டுவதை நிச்சயம் அனுமதிக்க முடியாது. அதேசமயம், அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபடுகிறதோ என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தனது நடவடிக்கைகளில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கத் தூதர் உள்ளிட்ட அதிகாரிகள் தவாங் சென்றது; அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த அதிகாரபூர்வ விருந்தில் மத்திய அமைச்சருடன், தர்மசாலாவிலிருந்து இயங்கிவரும் நாடு கடந்த திபெத் அரசின் தலைவரும் கலந்துகொண்டது போன்ற சமீபத்திய சம்பவங்கள் சீனாவுக்கு இந்தியா ஏதோ செய்தி சொல்ல விரும்புவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. இத்தனைக்கும் இந்த நிகழ்வுகளின் பின்னணியில் கொள்கை மாற்றங்கள் ஏதும் இல்லை.
பதிலுக்குப் பதில் குடைச்சல் கொடுப்பது கொள்கைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. சீனாவுடனான முக்கியப் பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அணு விநியோக நாடுகள் குழுவில் இடம்பெறுவது, ஐநா பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை இடம்பெறச் செய்யும் முயற்சி ஆகிய விவகாரங்கள் தொடர்பாகவே சீனாவுடன் இந்தியா வாதிட்டுவருகிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை. “இந்தியா தனது கிழக்கு எல்லைப் பகுதி (அருணாசல பிரதேசம்) விஷயத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொண்டால், மற்ற விஷயங்களில் - அதாவது, மேற்கு எல்லைப் பகுதி (ஜம்மு காஷ்மீர்) போன்ற விஷயங்களில் - சீனாவும் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்ளும்” என்று சீனாவின் முன்னாள் சிறப்புத் தூதர் தாய் பிங்குவோ சமீபத்தில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இதுபோன்ற அறிக்கைகள், இந்த ஆண்டில் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையே 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சமிக்ஞை எனில், அதில் இரு நாடுகளும் தனித்த கவனம் செலுத்த வேண்டும்!