சர்வதேச உறவுகள், சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்துமே கவனமுடன் மேற்கொள்ளப்பட வேண்டியவை. உலகின் பிற நாடுகளுடன் இணைந்து வாழாமல் எந்த நாடும் தனித்தீவாக வாழ்ந்துவிட முடியாது. வணிகத்தைப் பெருக்கவும் விவசாயம், தொழில்துறைகளை வளர்த்தெடுக்கவும்தான் உலக வர்த்தக ஒப்பந்தம். ஆனால், அதில் நாட்டாண்மை செய்யும் மேலாதிக்கத்தை, வளர்ந்த நாடுகள் எப்போதுமே மேற்கொண்டுவருகின்றன. தங்கள் நாட்டுப் பொருள்களை விற்பதற்கான சந்தையாகவும், தங்களுக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் களமாகவும், வளரும் நாடுகளை அவை கருதுகின்றன.
இப்போது, வளரும் நாடுகளுக்குப் புதிய சோதனை ஏற்பட்டிருக்கிறது. ‘எந்த நாடும் தன்னுடைய மொத்த வேளாண் உற்பத்தி மதிப்பில் 10%-க்கும் அதிகமாக மானியம் தரக் கூடாது’ என்று பணக்கார நாடுகள் விடாப்பிடியாக வற்புறுத்துகின்றன. அதற்கு உலக வர்த்தக ஒப்பந்தத்தை (டபிள்யு.டி.ஓ.) ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கின்றன. இந்தியா தலைமையிலான ‘ஜி-33’ நாடுகள் அமைப்பில் உள்ள வளரும் நாடுகளும் இதர 13 நாடுகளும் இதை ஏற்கத் தயாராக இல்லை.
இந்திய அரசு சமீபத்தில்தான் ‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை’ நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி, வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி அல்லது கோதுமை மிகக் குறைந்த விலையில் பொதுவிநியோக அமைப்பு மூலம் மாதந்தோறும் வழங்கப்படும். இதனால், பட்டினிச் சாவுகள் மறையும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் மக்கள் நோயுறுவதும் தடுக்கப்படும். ஏழைக் குழந்தைகள் படித்துத் தங்களுடைய கல்வித் தகுதியையும் தொழில் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும். கல்வி, மனிதவளம், தொழில்துறை என்று எல்லா துறைகளுக்குமே இது நன்மையைத் தரும்.
மானியத் தொகையை, 1986-87-ம் ஆண்டில் உணவு தானியங்கள் விற்கப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர். இது அடிப்படையிலேயே தவறானது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004-ல்தான் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தது. அது பதவிக்கு வந்தது முதல், இப்போதுவரையுள்ள குறைந்தபட்சக் கொள்முதல் விலையை ஒப்பிட்டாலே அது 200% உயர்ந்திருப்பது தெரியும்.
இந்நிலையில், உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, ஒரு நாடு ஒப்புக்கொள்ளாவிட்டால்கூட ஒப்பந்தத்தைத் திணிக்க முடியாது. அதாவது, எல்லா நாட்டுக்குமே ரத்து அதிகாரம் (வீட்டோ) இருக்கிறது.
வளரும் நாடுகள் ஏற்கவே மறுத்தால், இந்த மானியத்தை நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் யோசிப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
உலக வர்த்தக ஒப்பந்தம் என்பது எல்லா நாடுகளின் நலனையும் மனதில் கொண்டதாக இருக்க வேண்டும். உலகம் சமநிலை பெற, ஏழை நாடுகளுக்கு அதிக சலுகையும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தையை மேலும் நீட்டிக்கலாம். ஆனால், நிபந்தனையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் ராபர்ட்டோ அசிவேடோ நயமாகக் கேட்கிறார். இந்தோனேஷியாவின் பாலியில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்கவிருக்கும் தொழில், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இதற்கு உடன்படவே கூடாது.