ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 12-ல் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் அதிமுக தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு மற்றுமொரு தேர்தலாக இருக்கலாம். ஆனால், இரு அணிகளாகப் பிளவுபட்டிருக்கும் அதிமுகவைப் பொறுத்தவரை, இத்தேர்தல் அவர்களது எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
கட்சியையும் ஆட்சியையும் தன் வசம் வைத்திருக்கும் சசிகலா அணிக்குத் தொண்டர்கள், மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். அதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. மறுபுறம் சசிகலா தரப்புக்கும் இது ஒரு சவால். ஆக, ஒரு பலப்பரீட்சையாக இத்தேர்தல் களம் அமைந்திருக்கிறது. இரண்டு அணிகளுமே தங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் இரண்டு அணிகளுக்குமே சின்னத்தை மறுத்திருக்கிறது.
இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுப்பதைத் தள்ளிவைத்திருந்தாலும் இந்தத் தேர்தலில் இரட்டை இலையை முடக்கிவைத்தது அக்கட்சியின் பிரதான அணியான சசிகலா அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு. இரு அணிகளுக்கும் பாரபட்சம் காட்டாமலேயே இந்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தைப் போன்றே தோற்றமளிக்கும் இரண்டு விளக்குகளைத் தாங்கிய ‘மின் கம்பம்’ சின்னத்தை பன்னீர்செல்வம் அணி தேர்ந்தெடுத்திருப்பது ஒருவகையில், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு அனுகூலம் என்றே சொல்ல வேண்டும்.
வேட்பாளர் தேர்விலும், அந்தத் தொகுதியோடு நீண்ட தொடர்புடைய மதுசூதனனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்தியிருக்கிறது பன்னீர்செல்வம் அணி. சசிகலா அணி கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட அவருடைய அக்காள் மகன் தினகரனையே வேட்பாளராகக் களம் இறக்கியிருக்கிறது. மிகத் துணிச்சலான, அதே அளவுக்கு அபாயமும் மிக்க ஒரு முடிவு என்று இதைச் சொல்லலாம்.
ஆளுங்கட்சிக்குள் வெடித்திருக்கும் பிளவு இயல்பாக தனக்கான வெற்றியாக மாறும் என்று கணக்கிட்டு ஒரு புதிய முகத்தைக் களமிறக்கியிருக்கிறது திமுக. கட்சி மு.க.ஸ்டாலின் முழுத் தலைமையின் கீழ் வந்த பின் அது சந்திக்கும் முதல் தேர்தல் இது.
பொதுவாக இடைத்தேர்தல்களின் வெற்றி, தோல்விகள் பெரிய அளவில் தொடர் பேசுபொருளாகவும் அரசியல் திசை மாற்றக் காரணியாகவும் மாறுவதில்லை. அரிதாக அப்படி உருவாகும் சூழல், இப்போது தமிழகத்தில் இந்தத் தேர்தலில் உருவாகியிருக்கிறது. இந்தத் தேர்தலில், யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் காட்டிலும் அதிமுகவின் இரண்டு அணிகளில் வாக்குகள் வரிசையில் எது முன்னணி வகிக்கப்போகிறது என்பதும்கூடத் தமிழக அரசியலில் புதிய போக்குகளை உருவாக்கக் கூடும்!