தலையங்கம்

ஓட்டு அரசியல்!

செய்திப்பிரிவு

இந்தியாவின் நிலைப்பாடு இறுதியில் தெரிந்துவிட்டது. காமன்வெல்த் 54-வது மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை; வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்கிறது.

கடந்த 20 ஆண்டு கால காமன்வெல்த் அமைப்பின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், 10 மாநாடுகள் கூடியுள்ளன. இவற்றில் ஐந்து முறை இந்தியக் குழு, பிரதமர் தலைமையில் சென்றிருக்கிறது; ஒரு முறை குடியரசுத் துணைத் தலைவர்; நான்கு முறை மத்திய அமைச்சர்கள் தலைமையில் சென்றிருக்கிறது. ஆக, இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதோ பங்கேற்காததோ பொதுவில் ஒரு பூதாகரமான விஷயம் அல்ல. அதே சமயம், இலங்கைத் தமிழர் விவகாரத்தை முன்வைத்து, ‘‘இந்திய அரசு இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்’’ என்று தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவந்த நிலையில், பிரதமர் பங்கேற்காமல், அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தியாவின் முடிவு சர்வதேச அளவில் ஒரு சமிக்ஞையைக் கொடுக்கும்.

அந்த சமிக்ஞை சொல்லப்போவது என்ன? இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில், மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என்பதா? நிச்சயமாக இல்லை.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஓட்டு அரசியலைப் பாதுகாக்க இந்தியப் பிரதமர் நழுவிக்கொண்டார் என்பதையே அந்த சமிக்ஞை வெளிப்படுத்தும். ஓட்டு அரசியலைத் தாண்டி, பிரதமரின் இந்த முடிவால் யாருக்கு என்ன லாபம்? முக்கியமாக, இலங்கைத் தமிழர்களுக்கு? உண்மையில், தமிழர்கள் விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தன்னுடைய நெருக்கமான உறவைப் பயன்படுத்துவதற்கான தார்மீக பலத்தையும் இந்தியா இழக்கும் என்பதே யதார்த்தம்.

இங்கிலாந்தும்கூட இந்த மாநாட்டில் பங்கேற்க உள்நாட்டில்

எதிர்ப்பை எதிர்கொண்டது. மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் கேமரூன், ‘‘வட மாகாணத் தேர்தல், மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் போன்ற பணிகள் முக்கியமானவை என்றாலும், அவை மட்டுமே போதுமானவை அல்ல; இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மீது வெளிப்படையான, தன்னாட்சி பெற்ற அமைப்பின் விசாரணையை மாநாட்டின்போது இலங்கை அரசிடம் வலியுறுத்துவேன்’’ என்று கூறியிருக்கிறார். இதுதான் ஆக்கபூர்வமான முடிவாக இருக்க முடியும்.

ஒருபுறம் மாநாடு விஷயத்தில், இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கும் இந்தியா, இன்னொருபுறம் இலங்கைப் போரின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்த இங்கிலாந்து இயக்குநர் கல்லம் மெக்ரே இந்தியா வர விசா தராமல் இழுத்தடிக்கிறது. கடந்த ஆண்டு நோபல் பரிசு பெறத் தகுதியானோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் மெக்ரே. வேடிக்கை என்னவென்றால், இலங்கை அரசு அவருக்கு விசா அளித்திருக்கிறது. ‘‘ஆனால், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு, இலங்கை தன்னை மெச்சுவதற்காக இப்படி இழுத்தடிக்கிறது என்பதை நம்ப முடியவில்லை’’ என்கிறார் மெக்ரே.

சர்வதேச உறவுகளில் அரசியலைத் தாண்டி ஆக்கபூர்வமான ராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்க இன்னும் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன அரசின் இரு முடிவுகளும்.

SCROLL FOR NEXT