அவமானங்கள் கூடும் காலம் இதுபோலும். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகக் காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் இருவருடைய வீடுகளிலும் குட்கா விவகாரம் தொடர்பில் சிபிஐ சோதனை நடந்திருக்கிறது. தொடர்ந்து, குட்கா தயாரிப்பு நிறுவனங்களை நடத்திவந்த சிலரும் அவர்களிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின்பேரில் அதிகாரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஊழல் விவகாரம் என்பதைத் தாண்டி, கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வோடு பிணைந்திருக்கும் ஒரு விவகாரம் இது. மாநிலத்தின் சுகாதாரத் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் அமைச்சர், மாநிலக் காவல் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்று ஆட்சியிலும் நிர்வாகத்திலும் முக்கியமான பொறுப்புகளில் உள்ள இருவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், நடத்தப்பட்டுவரும் சோதனைகள், கைதுகளை சாதாரணமாகக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காததோடு, முதல்வர் பழனிசாமி காட்டிவரும் அசாத்திய மௌனம் தார்மிகம் எனும் பொறுப்புணர்வே தன்னுடைய அரசுக்கு இல்லை என்று அவர் கருதுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு 2001-லேயே தடைவிதிக்கப்பட்டுவிட்டது. எனினும், விற்பனை தொடர்ந்தது. “காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை; பெரிய லஞ்ச வலை இதன் பின்னணியில் இருக்கிறது” என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்தன. இரண்டாண்டுகளுக்கு முன்பு குட்கா தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகள் அதை உறுதிப்படுத்துவதுபோலவே இருந்தன. குட்கா விற்பனையில் அமைச்சர்கள், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாயின. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அலட்டிக்கொள்ளவே இல்லை. தமிழக அரசும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ‘குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை எந்த அறிக்கையும் அனுப்பவில்லை’ என்று பிரச்சினையை மூடி மறைக்கவே முற்பட்டது.
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதே தமிழக அரசு மீது விழுந்த அடிதான். மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை இந்த வழக்கை நியாயமாகக் கையாண்டிருந்தால் சிபிஐ வசம் வழக்கு சென்றிருக்காது. விஜயபாஸ்கர், ராஜேந்திரன் இருவரும் தார்மிக அடிப்படையில் முன்பே தாமாக முன்வந்து பதவி விலகியிருக்க வேண்டும். நிலைமை இப்போது இந்த அளவுக்குக் கீழே இறங்கிவிட்ட நிலையிலும், அவர்கள் பதவியில் நீடிப்பதை அரசு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அவர்களாக விலகாதபட்சத்தில் அவர்களைப் பொறுப்பிலிருந்து விலக்குவது முதல்வரின் தார்மிகக் கடமை. ஆட்சியாளர்களுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது அரசு எனும் அமைப்பு மீதான மக்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது. துறைகளைக் காத்திடும் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் மீதான நம்பகத்தன்மையை எப்போது இழக்கிறார்களோ அப்போதே அவர்கள் தங்களுடைய தார்மிக பலத்தை இழந்துவிடுகிறார்கள். இப்படியானவர்களுக்கு முட்டுக்கொடுப்பதன் வாயிலாக அரசும் தன் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது!