தலையங்கம்

நதிகளைக் காக்கத் தவறும் அரசுகள்!

செய்திப்பிரிவு

நதிகளைக் காக்கும் நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசுத் துறைகள் தோல்வியடைந்திருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது, மத்திய சுற்றுச்சூழல் வாரியம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை. கடுமையாக மாசடைந்திருக்கும் ஆற்றுப் பகுதிகளின் எண்ணிக்கை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 302 ஆக இருந்தது, தற்போது 351 ஆக உயர்ந்திருக்கிறது என்கிறது தேசியப் பசுமை நடுவர் மன்றத்தின் ஆணைப்படி நடத்தப்பட்ட இந்த ஆய்வறிக்கை. நகர்ப்புறச் சாக்கடைகளின் கலப்பு, ஆலைகளின் ரசாயனக் கழிவுக் கலப்பு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.

கங்கை நதி நீரைச் சோதித்ததில் உத்தர பிரதேசத்தில் மட்டும் அதன் தரம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. அந்நதி பாயும் மற்ற மாநிலங்களில் நீரின் தரம் குறைந்துகொண்டே போகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கங்கையைச் சுத்தப்படுத்த ரூ.3,696 கோடி செலவிடப்பட்டது. எஞ்சிய 14 மாநிலங்களில் 32 ஆறுகளைக் காக்க வெறும் ரூ.351 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்காகவும் தண்ணீரின் தரத்தைக் காக்கவும் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களால் பலன் ஏதும் இல்லை. மகாராஷ்டிரம், குஜராத், அசாம் மாநிலங்களில் இந்தப் பாதிப்பை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. மாசடைந்த ஆறுகளில் மூன்றில் ஒரு பகுதி பாய்வது இம்மாநிலங்களில்தான்.

நகரங்களையும் ஆறுகளையும் மாசுபடுத்துவதில் முக்கிய இடம் வகிப்பவை திடக் கழிவுகள், நகர சாக்கடைகள், தொழிற்சாலைகள், தொழில் பட்டறைகளிலிருந்து வெளியேறும் ரசாயன நச்சுத் திரவங்கள். இந்நிலையில், நகரங்களில் சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும் நிலையங்களை அமைத்து தண்ணீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இந்நிலையங்களுக்கு இடையறாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும். மொத்த சாக்கடை நீருக்கும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் இடையிலான இடைவெளி ஒரு நாளைக்கு 1,31,960 லட்சம் லிட்டராகக் கடந்த ஆண்டு இருந்திருக்கிறது. அதாவது, பெருமளவு சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படவில்லை. புதிய வீடுகளும் குடியிருப்புப் பகுதிகளும் உயர்ந்துவரும் எண்ணிக்கைக்கு ஏற்பக் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதில்லை. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டங்களை அமல்படுத்துவதில் அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.

சுற்றுச்சூழல் மாசுகளால் இந்தியாவுக்கு ஏற்படும் சேதம் தொடர்பாக 2013-ல் ஆய்வு நடத்திய உலக வங்கி, அதன் மதிப்பு ரூ.5.7 லட்சம் கோடி என்று மதிப்பிட்டுள்ளது. இது எத்தனை பெரிய இழப்பு? நல்ல நீரோட்டம் இல்லாமல் கழிவுநீரால் இறந்துகொண்டிருக்கும் நதிகள், இதனால் பாழாகிவரும் விவசாயம், விவசாயமும் தொய்வடைவதால் நலிவடையும் பொது சுகாதாரம் என்று தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்விஷயத்தில் அரசுகள் இன்னமும் அலட்சியம் காட்டுவது வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்யும் துரோகம் அன்றி வேறில்லை!

SCROLL FOR NEXT