இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 தங்கம் உட்பட 69 பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். சமீப காலங்களில் நடந்த ஆசியப் போட்டிகளுடன் ஒப்பிடுகையில், பல துறைகளில் ஆடவர் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இனி, சர்வதேச அரங்குகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மேலும் சிறப்பான வசதிகளையும் பயிற்சிகளையும் செய்து தர வேண்டும் என்ற ஆர்வம் விளையாட்டுத் துறை நிர்வாகிகளுக்கும் விளையாட்டுச் சங்கங்களுக்கும் புரவலர்களுக்கும் ஏற்படும் என்று நம்புவோம்.
ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில் தடம் மற்றும் களம் போட்டிகளில் மட்டும் இந்தியாவுக்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தங்கப் பதக்கங்கள் எண்ணிக்கை மட்டும் ஏழு. ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்டா 88.06 மீட்டர் தொலைவுக்கு எறிந்து தங்கம் வென்றதுடன் உலக சாதனையையும் படைத்திருக்கிறார். கடுமையான பல் வலியால் அவதிப்பட்ட நிலையிலும், ஹெப்டத்லானில் (ஏழு வெவ்வேறு போட்டிகள்) ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றது பிற வீரர்களுக்கும் ஊக்கம் தரும் விஷயம். இத்தனைக்கும், இரண்டு கால்களிலும் ஆறு விரல்களைக் கொண்ட அவருக்குப் பொருத்தமான காலணி கிடைக்காதது பெரும் சவாலாக இருந்தது. தனது மன உறுதியாலும் விடாமுயற்சியாலும் இதைச் சாதித்திருக்கிறார்.
49 கிலோ எடைப் பிரிவாளர்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் அமித் பங்கால், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவரும் ஒலிம்பிக் போட்டியாளருமான ஹசன்பாய் துஸ்மதோவை வீழ்த்திப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தப் பிரிவில் தலா இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆசியப் போட்டிகளில் நாம் பதக்கம் வாங்கியதில்லை என்ற குறை, இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றதால் தீர்ந்தது. பூப்பந்தில் பி.வி.சிந்து ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் கிடைக்கச்செய்தார். சாய்னா நெவால் வெண்கலம் வென்றார். கபடிப் பிரிவில் ஆடவர், மகளிர் அணி எதுவுமே தங்கப் பதக்கம் பெறவில்லை. இப்படி நேர்வது இதுவே முதல் முறை. ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலம்தான் வென்றது. இத்தனைக்கும் கடந்த போட்டியில் நாம்தான் சாம்பியன். இந்தமுறை வென்றிருந்தால் டோக்கியோ போட்டியில் விளையாடும் அணியாக எளிதில் இடம்பிடித்திருப்போம்.
2010 குவாங்ஷு நகரில் நடந்த ஆசியப் போட்டியில் மொத்தமாக 65 பதக்கங்கள் பெற்றதுதான் இதுவரையில் நாம் வாங்கிய அதிக பதக்கங்கள் என்ற சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்டா, ஹிமா தாஸ் போன்ற புதிய நட்சத்திரங்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள். 2020 டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் இப்படி அபாரமான சாதனைகளைப் படைக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும்!