வங்கத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்துவந்த மருத்துவர்கள் கிளர்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்ததும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததுமே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போதுமானதாக இருந்திருக்கிறது. நிபந்தனையின்றி வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொண்டால்தான் பேச முடியும் என்று பிடிவாதமாக இருந்தார் மம்தா. நாடு முழுவதும் கிளர்ச்சி பரவிய நிலையில்தான், மருத்துவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
கடந்த ஜூன் 10-ல் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி இறந்தார். மருத்துவர்கள் போதிய அக்கறை செலுத்தி அவரைக் கவனிக்காததால்தான் இறந்தார் என்று ஆத்திரப்பட்டு, அவருடன் வந்தவர்கள் அங்கிருந்த இளநிலை மருத்துவர்களைத் தாக்கினர். ஒரு மருத்துவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, பணியிடத்தில் தங்களுடைய உயிருக்குப் பாதுகாப்பு தேவை என்று முதலில் வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் வேலைநிறுத்தக் கிளர்ச்சியில் இறங்கினர். பிறகு, அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்கள் அடையாளப் போராட்டங்களை நடத்தினர்.
மருத்துவர்கள் கவனிக்காததோ, நோயாளிகளின் உறவினர்கள் கோபப்பட்டு அவர்களைத் தாக்கியதோ மட்டும் பிரச்சினையல்ல. மருத்துவமனைகளுக்கு வந்து குவியும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்பப் பணியாளர்களும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத காரணத்தால்தான் சிகிச்சைகளில் குறைகள் ஏற்படுகின்றன. அதே நேரம், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் வரம்பில்லாமல் தொடர்ந்து பணிபுரிய வேண்டிய மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர்.
மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்களின் மீது தாக்குதல் நடத்துபவர்களைக் கைதுசெய்யவும், பிணையில் வர முடியாதபடிக்குச் சிறையில் அடைக்கவும், இழப்பீடு பெறவும் மத்திய அரசு 2017-ல் தயாரித்த சட்ட வரைவின் அடிப்படையில் மாநிலங்கள் சட்டம் இயற்றலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார். வங்கத்தில் ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50,000 வரையில் அபராதம் விதிக்க முடியும். சேதங்களுக்கு இழப்பீடு பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்றியுள்ள சட்டப்படி, இத்தகைய குற்றம்புரிவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நிச்சயம்.
இத்தகைய சம்பவங்களை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் அணுகுவதில் நியாயமில்லை. நோய் முற்றிய நிலையில் அல்லது கடுமையான விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஓரளவுக்குத்தான் பலன் அளிக்கும் என்ற உண்மை நோயுற்றவருடன் வருகிறவருக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். மருத்துவமனைகளின் அடித்தளக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையைப் பெருக்க அரசுகள் முன்னுரிமை தர வேண்டும். இதற்காகும் முதலீட்டை, வீண் செலவாகக் கருதக் கூடாது.