பொ
துத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உறுதியேற்புக் கடிதங்கள் (எல்ஓயு) மூலமாக ரூ.12,800 கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்திருக்கும் நிலையில், அத்தகைய கடன் வசதிக்குத் தடை விதிக்க முடிவுசெய்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளைக் கணினி வலையமைப்பு மூலம் பெறும் வசதியுடன் (சிபிஎஸ்), வெளிநாடுகளில் அவரசத் தேவைக்குப் பணம் பெறும் ‘ஸ்விஃப்ட்' நடைமுறையை இணைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது. கடன் உறுதியேற்புக் கடிதங்கள் மூலம் நிதி திரட்டிக்கொள்ளும் வாய்ப்பை மறுப்பதால், அது இறக்குமதியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
இறக்குமதியாளர்கள் தேவைப்படும் கடன் தொகையைக் குறுகிய காலத்தில் பெற, ‘கடன் உறுதியேற்புக் கடிதங்கள்' சிறந்த கருவியாகப் பயன்பட்டுவந்தன. இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.6,30,000 கோடியைக் கடனாகப் பெறுகின்றனர். அதில் 60% கடன் உறுதியேற்புக் கடிதங்கள் மூலமே பெறப்படுகின்றன. இனி கடன் வேண்டுமென்றால் வங்கி உத்தரவாதம் அல்லது கடன் அனுமதிக் கடிதம் (எல்ஓசி) போன்றவற்றின் மூலம்தான் வாங்க வேண்டும். இவற்றுக்கு அதிக வட்டியைச் செலுத்த வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் முதல்முறையாக இந்த மோசடி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் அகத் தணிக்கை முறையும் கண்காணிப்பும் தோற்றுவிட்டதையும் இம்மோசடி காட்டுகிறது என்று கூறியுள்ள படேல், இத்தகைய இடர்ப்பாடுகள் குறித்து தாங்கள் விடுத்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசுத் துறை வங்கிகளின் நிர்வாகக் குழுவில் உள்ள இயக்குநர்களை மாற்றவும், அத்தகைய வங்கிகளைச் செயல்பட முடியாமல் தடுக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லாதபோது இந்த ஊழல்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டிருக்கிறார் உர்ஜித் படேல். ரிசர்வ் வங்கியின் அதிகாரம் வங்கிகள் மீது இன்னும் அழுத்தமாக விழும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். உர்ஜித் படேல் அளித்திருக்கும் விளக்கம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
அரசு வங்கிகள் ‘இரட்டைக் கட்டுப்பாடுகளுக்கு' உட்பட்டது. ஒன்று அரசு, இன்னொன்று ரிசர்வ் வங்கி. இதில் ரிசர்வ் வங்கியின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது. வங்கியில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டவுடன் பதறியடித்து நடவடிக்கை எடுப்பது சரியல்ல, பிரச்சினையின் ஆணி வேர் வரை சென்று ஆராய்ந்து சரி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுவது மிகவும் சரி. அதேநேரத்தில், கடன் உறுதியேற்புக் கடிதங்களை வழங்கும் முறையையும் கடன் தருவதையும் மேலும் சில விதிகள் மூலம் கண்காணிப்புக்கு உட்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ரிசர்வ் வங்கி தான் எடுத்த முடிவைத் திரும்பப் பரிசீலனை செய்வது நல்லது!