தலையங்கம்

நூலகத் துறை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும்!

செய்திப்பிரிவு

நூ

லகங்களில் உறுப்பினர் சேர்க்கை, புரவலர்கள் சேர்க்கை நடத்துவது, நூலகத்துக்குத் தேவையான தளவாடங்களைப் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறுவது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது நூலகத் துறை. இவை தொடர்பாக நூலகர்கள் கல்வித் துறை அதிகாரிகளைச் சந்திப்பது, அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்குப் பரிசு அறிவிப்புகளும் வரவேற்புரிக்குரியவை. ஆனால், இத்தகைய அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றனவே தவிர, அவை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்பதுதான் ஏமாற்றம் தருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளாவது செயல்வடிவம் பெறுமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

2014 ஆகஸ்ட் 12-ல் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது, அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கும் நூலகர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் நூலக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது அதே அறிவிப்புகள் மேலும் புதிய சில திட்டங்களோடு மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

உறுப்பினர் சேர்க்கை, புரவலர்கள் சேர்க்கை, நூலகங்களுக்குத் தேவையான உபகரணங்களை நன்கொடையாகப் பெறுதல் ஆகியவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய விஷயங்கள். நூலகங்களுக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை நூலகங்களை நோக்கி அழைத்துவர, நூலகர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் கரம்கோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பள்ளிக்கூடங்களில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழங்கள் வாயிலாக இணைந்து இயங்குவதைப் போல, பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களுடன் இணைந்து செயல்படலாம். நூலகத் தேவைகளை உள்ளூர் அளவில், வாசகர்களே கூடி நிறைவுசெய்துகொள்ளலாம். வாசகர்களையும் இணைத்துக்கொண்டு நூலகங்களை நிர்வகிப்பது, நிச்சயம் பொது நூலகங்களின் வசதிகளை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த அடிப்படையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது நூலகத் துறையின் அறிவிப்புகள் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. அதேநேரத்தில், இத்தகைய அறிவிப்புகள் மட்டுமே போதுமானவையல்ல. ஆண்டுதோறும் வெளியாகும் சிறந்த புத்தகங்களை உடனுக்குடன் வாங்குவதற்கான முயற்சிகளையும் நூலகத் துறை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் வழங்கப்பட்ட நூலக ஆணைகள்குறித்து தொடர்ந்து கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுவருகின்றன. புத்தகங்களுக்கு நூலக ஆணை வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை, சில பதிப்பகங்களுக்கு மட்டுமே நூலக ஆணைகள் வழங்கப்படுகின்றன என்று பதிப்பாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். நூல்களுக்கான காகிதமும் அச்சுக்கூலியும் அதிகரித்துக்கொண்டிருந்தாலும், அதற்கேற்ப புத்தக விலை நிர்ணயம் அமைவதில்லை என்ற குறையும் உண்டு. தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்குவதிலும் தேர்வுசெய்வதிலும் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.

நூலகங்கள் என்பது முதலில் நூல்களுக்கான இடம். தேவைப்படும் நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு அறிவை வளர்த்துக்கொள்வதற்கான ஒரே வாய்ப்பு அதுதான். இந்நிலையில், போதிய அளவில் புதிய புத்தகங்களை வாங்காமல் உறுப்பினர் சேர்க்கை என்பது வழக்கம்போல வெற்று அறிவிப்பாகிவிடுகின்ற வாய்ப்பும் இருக்கிறது. எனவே, இந்த அறிவிப்புகளை விரைவில் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

SCROLL FOR NEXT