தலையங்கம்

மின்னூலாக்கத் திட்டம் அரசிடமிருந்தே தொடங்கட்டும்!

செய்திப்பிரிவு

சி

றந்த நூல்களை மறுபதிப்புசெய்வதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, பதிப்புலகுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அரசு வெளியிடும் மிகவும் அவசியமான புத்தகங்களின் பிரதிகளே பரவலாகக் கிடைக்காதிருக்கும் நிலையில், இத்தகைய திட்டங்களின் நோக்கமும் பயனும் நிறைவேறுமா என்ற கேள்வி யும் எழுகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், 1834 முதல் 1935 வரையிலான காலகட்டத்தில் வெளியான 70 அரிய நூல்களை வெளியிட்டார். அப்போது அந்த அரிய நூல்கள் மின்னூலாகவும் வெளியிடப்படும் என்று அறிவித்தார். வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள்கூட மறுபதிப்பு காண்பதில்லை. அவற்றை மறுபதிப்பு செய்வதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். நம்பிக்கையூட்டும் இந்த அறிவிப்பையொட்டிச் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் புத்தகங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கை 1,000 தான் என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் அமைச்சர். சிறந்த நூல்களைத் தொடர்ந்து பதிப்பிப்பவர்களில் மிகச் சிலர் மட்டுமே தொழில்முறை சார்ந்த பதிப்பகத்தன்மையோடு இயங்கிவருகிறார்கள். பெரும்பாலானவர்கள், விருப்பம் சார்ந்து பதிப்புத் தொழிலில் ஈடுபடுகிறவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, அனைவராலும் புத்தகங்களைச் சந்தைப்படுத்துவது என்பது இயலாத விஷயமாகவே இருக்கிறது. இந்நிலையில், பொது நூலகத் துறை உரிய கவனம் செலுத்தி ஆண்டுதோறும் சிறந்த நூல்களைத் தவறாமல் வாங்கினாலே, 1,000 பிரதிகள் விற்பனை என்பதை மிகவும் எளிதாகச் சாத்தியப் படுத்த முடியும். மறுபதிப்புகளின் வாயிலாகத்தான் விற்பனையை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதைப் போலவே அரிய நூல்களின் மின்னூலாக்கம் என்பதையும் அரசிடமிருந்தே தொடங்க வேண்டும். தமிழக அரசு பதிப்பித்துள்ள சட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள், உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள புத்தகங்களைக் கிடைக்குமாறு அரசு செய்ய வேண்டும்.

மாவட்டம்தோறும் விவரச் சுவடிகள் வெளியிட வேண்டியதும் அரசின் பொறுப்பு. ஆனால், சில மாவட்டங்களுக்கு மட்டுமே இதுவரையில் விவரச் சுவடிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பெரும் பாலானவை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டவை என்பதும், அவற்றில் பல இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதும் வருத்தம் தரும் விஷயங்கள். கர்நாடகத்தில் அனைத்து மாவட்ட விவரச் சுவடிகளும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரிய நூல்களைத் தேடித் தேடிச் சேகரித்து மின்னூலாக்கும் திட்டம் அவசியமானதுதான். அத்திட்டத்தின் ஒரு பகுதியாக கன்னிமாரா, சென்னைப் பல்கலைக்கழக நூலகம் போன்ற மிகவும் பழமையான நூலகங்களில் உள்ள பதிப்புரிமைக் காலம் நிறைவுற்ற புத்தகங்களை மின்னூலாக்கி வெளியிடலாம். அரசு முதலில் செய்யவேண்டியது இதுதான். இதன் மூலம், மிகக் குறைந்த செலவில், நம் மூதாதையர்களின் அறிவுச் செல்வங்களை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்ல முடியும். அதற்கான திட்டங் களையும் தமிழ் வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டின்போது பரிசீலிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT