பா
ட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சுகாதாரமானது என்று நம்பி, விலை கொடுத்து வாங்கி அருந்தும் தண்ணீரில், ‘கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அளவு பிளாஸ்டிக்குகள் மிதக்கின்றன’ என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்டப்பிரிவின் மதிப்பீட்டின்படி, எல்லா நாடுகளிலும் ஆண்டுக்கு 3,000 லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது. இந்த பிளாஸ்டிக்கைக் கையாள்வதில் அக்கறையும் திறனும் எந்த அரசுக்கும் இல்லை என்பதுதான் கவலைதரும் விஷயம்!
மைக்ரோ-பிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைந்த அளவுள்ள நுண்ணிய பிளாஸ்டிக் ஆகும். இது தொழிலகங்களில் உற்பத்தியாகிறது. தரையைச் சுத்தம்செய்யும் ‘ஸ்கிரப்ப’ர்களிலும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படு கிறது. நுகர்வோர் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பிளாஸ்டிக்குகள் உடைந்தும் சிதைந்தும் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலந்து விடுகின்றன, ஆனால் அழிவதில்லை. கழிவுநீரில் இத்துகள்கள் அடித்துச்செல்லப்படுகின்றன. துணிகளைத் துவைக்கும்போது நுண்ணிய நாரிழையாக பிளாஸ்டிக் துகள்கள் பிரிந்து நீர்நிலை களிலும் கடலிலும் கலக்கின்றன.
குடிநீரில் உள்ள பாலிபுரோபிலின், பாலிஎத்திலின் டெரப்தலேட் மற்றும் இதர ரசாயனங்கள் உணவு, சுவாசிக்கும் காற்று ஆகியவற்றில் கலப்பதால் உடலில் நஞ்சு சேர்கிறது. இவை உடலின் நோய்த்தடுப்பு ஆற்றலைக் குறைக்கலாம் அல்லது முழுதாக இழக்கவைக்கலாம். உலக அளவில் ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொண்டு இதன் விளைவுகளை மேலும் அறிய வேண்டும். தண்ணீரில் கலந்துவிட்ட பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீய விளைவுகளை ஆராய உலக சுகாதார நிறுவனம் முன்வந்திருப்பது நிம்மதியளிக்கிறது. கடல் சூழலில் பிளாஸ்டிக்கைக் கலப்பைத் தடுப்பது தொடர்பாக அனைத்து நாடுகளும் ஏற்கக்கூடிய ஒப்பந்த வரைவு வாசகங் களுடன் 18 மாதங்களில் வருவதாக ஐநா சபையின் உறுப்பு நாடுகள் கடந்த டிசம்பரில் நைரோபியில் உறுதியேற்றன. ஒவ்வோராண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேர்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் காகித உறைகள் இவற்றில் அதிகம். ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசி எறியப்படும் மைக்கா என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்குகளால் இந்தியாவில் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது.
2016-ல் இயற்றப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை எல்லா ஊர்களிலும் கடைப்பிடிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். நகரக் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக்கையும் இதர திடப்பொருட்களையும் பிரிப்பதன் மூலம், சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் கழிவு சேருவதைக் கணிசமாகத் தடுத்துவிடலாம். உள்ளாட்சி அமைப்புகளும் மக்களும் இணைந்து திடக்கழிவுகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் எளிதில் பிரித்துவிடலாம். பிளாஸ்டிக் தயாரிப் பிலேயே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். விலை மலிவான, பயன்படுத்திய பிறகு தூக்கி எறியும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முழுதாக மறுசுழற்சி செய்யவல்ல பிளாஸ்டிக்குகளைத் தயாரிக்க வேண்டும்.