க
ர்நாடக மாநில சட்ட மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆளுங்கட்சியான காங்கிரஸும் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவும் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகிவருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை ‘தென்னிந்திய நுழைவுவாயி’லாகக் கருதப்படுவது கர்நாடகாதான். 2008 சட்ட மன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பாஜக பல சர்ச்சைகளைச் சந்தித்தது. முதலமைச்சராக இருந்த எடியூரப்பா உட்பட பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளாலும் மெத்தனமான நிர்வாகத்தாலும் மக்களுடைய ஆதரவை இழந்தது. இந்நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பாஜகவுக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. தேவகௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் இந்தப் போட்டியில் பின்தங்கியிருக்கிறது.
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக வசம் இருக்கும் ஒரே அஸ்திரம் எடியூரப்பாதான். அதேசமயம், அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய பாரமும் அவர்தான். சட்டவிரோத கனிம அகழ்வு, நில பேரங்கள் தொடர்பாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்ததால், அவரை முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்னது பாஜக தலைமை. தான் சொல்கிறபடி கேட்கிறவரை முதல்வர் பதவி யில் அமர்த்தி, அவர் மூலம் ஆட்சியைத் தொடர நினைத்தார் எடியூரப்பா. கட்சியின் தேசியத் தலைமை அதற்கு இடம்தரவில்லை. இதையடுத்து, ‘கர்நாடக ஜனதா பட்ச’ என்ற தனிக் கட்சி யைத் தொடங்கினார். 2014-ல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த மோடி, எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்த்து முக்கியப் பொறுப்புகளை அளித்தார். எனவே, கர்நாடகத்திலிருந்து மக்களவைக்கு பாஜக சார்பில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, எடியூரப்பா உதவியுடன்தான் கர்நாடகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்பதை பாஜக தலைமை உணர்ந்து கொண்டிருக்கிறது.
சைவர்களில் ஒரு பிரிவினரான லிங்காயத்துகள் தங்களைச் சிறுபான்மையினராக - தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் அரசிதழிலும் அறிவித்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. மத்திய அரசின் பரிசீலனைக்கும் அனுப்பிவைத்துவிட்டார். மாநில நலனை விட்டுத் தர மாட்டேன் என்பதை உணர்த்தும் வகையில் கர்நாடக மாநிலத்துக்கென்று தனிக் கொடியையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இவ்விரு முடிவுகளுக்கும் மத்திய அரசுதான் ஒப்புதல் தர வேண்டும் என்றாலும், இவற்றை ஏற்றாலும் நிராகரித்தாலும் அதன் அரசியல் பலன் காங்கிரஸுக்கே கிடைக்குமாறு தந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார். இந்து - இந்தி ஆதரவுக் கட்சியாக பாஜக தன்னைக் காட்டிக்கொள்வதால், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிப்பதற்குப் பெரிய போராட்டம் நடப்பதை ஆதரித்தார் சித்தராமையா.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்குப் பெருத்த உற்சாகத்தை அளிக்கும். அத்துடன் 2019 தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று மக்கள் ஊகிக்க அது கட்டியமாகக்கூட அமையும். எனவே, கர்நாடக சட்ட மன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே மிகமிக முக்கியமானது.