த
மிழகத்தில் தொன்மையான கோயில்கள் மாவட்டந்தோறும் இருக்கின்றன. கோயில்கள், வழிபாட்டுத் தலங்களாக மட்டும் விளங்கவில்லை. காலம்தோறும் நடந்த ஆட்சி மாற்றங்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. அறம் வளர்த்த பண்பாட்டின் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. இயல், இசை, நாடகக் கலைகளை வளர்த்த மையங்களாகவும் ஓவிய, சிற்பக் கலைக்கூடங்களாகவும் விளங்கிய கோயில்கள் இன்று வழிபாட்டுத் தலங்களாக சுருங்கிப்போய் விட்டனவோ என்ற கவலை எழுகிறது.
பழைமையான கோயில்களைப் பற்றிய வரலாற்றை அடுத் தடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் அத்தகைய பணிகளை வரலாற்றாய்வாளர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். தஞ்சை பெரு ஆவுடையார் ஆலயத்தைப் பற்றியும் தாராசுரம், திருவாரூர் கோயில்களைப் பற்றியும் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய புத்தகங்கள், அழகர் கோயிலைப் பற்றி தொ.பரமசிவம் எழுதிய நூல், பழனி வரலாற்று ஆவணங்களைப் பற்றி செ.ராசு எழுதிய நூல், சுசீந்திரம் மற்றும் திருவட்டாறு கோயில்களைப் பற்றி அ.கா.பெருமாள் எழுதிய நூல் கள் கோயில்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாற்றை விரிவாகப் பேசுகின்றன. ஆனால், இந்த முயற்சி வரலாற்றுத் துறை அறிஞர்களோடு முடிந்துவிடக் கூடாது. அரசுக் கும் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அறநிலையத் துறைக்கும் இது தொடர்பாகப் பெரும்பொறுப்பு இருக்கிறது.
திருப்பதி கோயில் தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்ட திருமலைக் கோயிலின் வரலாறு பற்றிய ஆங்கில நூல் அந்த வகையில் குறிப்பிடத்தக்கது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.ரமேசன், அந்த நூலை பிரிட்டிஷ் காலத்து மாவட்ட விவரச் சுவடியைப் போல வரலாறு, நிலவியல், கலைகள், நம்பிக்கைகள் என்று அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி மிக விரிவாக எழுதியிருப்பார். திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அந்த நூல், மலிவுப் பதிப்பாக வெளியிடப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. அத்தகைய ஒரு முயற்சியை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும் முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தகுதியான வரலாற்று அறிஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமை.
இந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில வெளியீடுகள், இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் இழக்கும்வகையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோயில்கள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. கோயிலின் பெயர், அமைந்துள்ள ஊர், போக்குவரத்து வசதிகள் என்று சுற்றுலா வழிகாட்டி நூல்களைப் போலவே அவை இருக்கின்றன. அந்தத் தகுதியை அடைவதற்கும் கூட அந்த நூலாக்க முயற்சி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டுமோ என்றும் எண்ணவைக்கிறது.
தமிழகம் தவிர்த்த இதர மாநிலங்களில் உள்ள பழைமையான கோயில்களுக்குச் செல்லும்போது, அக்கோயில் எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது, அதன் சிறப்புகள் என்னென்ன, அக்கோயிலில் உள்ள ஓவியங்கள், சிற்பங்களின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி விளக்குகின்ற புத்தகங்களைக் கோயில் வளாகத்திலேயே வாங்கிப் படிக்கும் வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை வாய்க்க வேண்டும்!