இந்திய அரசியலையே ஒரு கணம் உறையவைத்திருக்கிறது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.தன்னுடைய முந்தைய ஆட்சியின்போது சட்ட விரோதமான வகையில், சொத்துகளைக் குவித்தார் என்று தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (1) (இ) மற்றும் 13 (2) பிரிவுகளின் கீழ், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதத்தையும் விதித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்திருக்கிறார்.
இந்தத் தீர்ப்பின் தொடர்ச்சியாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, முதல்வர் பதவியையும் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்ததோடு, தண்டனைக் காலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகான 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்திருக்கிறார் ஜெயலலிதா.
இதுவரையிலான ஜெயலலிதாவின் எழுச்சிகள், வீழ்ச்சிகளோடு பட்டியலிட்டு ஒப்பிடக் கூடிய விஷயம் அல்ல இது. அதேபோல, ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு அரசியல் தலைவர் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுவதும் சரியான வழிமுறை அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கோடு ஒப்பிட்டு நாம் அணுக வேண்டிய விவகாரம் இது.
இந்திய அரசியலைச் செல்லரிக்கும் மிகப் பெரிய புற்றுநோயாக உருவெடுத்துவருகிறது ஊழல். அரசியல் வர்க்கத்துக்கு இணையாக அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது. நாட்டின் எந்த மாநிலமும் ஊழலுக்கு விதிவிலக்கானதாக இல்லை. அறத்தின் மையமாக இருக்க வேண்டிய அமைப்புகளும், அதைப் பாதுகாக்க வேண்டிய மனிதர்களும் நெறி பிறழும்போது, சாதாரணக் குடிமக்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பின் மீது மட்டுமல்லாமல், அறத்தின் மீதே நம்பிக்கையற்றவர்களாக மாறிப்போகிறார்கள்.
நீதிமன்றங்கள் தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்யும்போது சமூகத்தில் நடக்கும் முக்கியமான பணி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோ, அவர்கள் தண்டிக்கப்படுவதோகூட இல்லை; அறத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் இப்படிப்பட்ட சாதாரண மக்களை மீட்டெடுப்பதே ஆகும். அறத்தின் முன் அனைவரும் ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற ஒளிவிளக்கைக் காப்பதே ஆகும்.
ஏறத்தாழ 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இது. அதிகார உச்சத்தின் உக்கிரத்தை, அழுத்தங்களை, எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட விசாரணை. இறுதியில், அரசுத் தரப்பும் இந்த வழக்கை வெவ்வேறு காலங்களில் விசாரித்த பல்வேறு நீதிபதிகளும் எல்லா இடர்ப்பாடுகளையும் தாண்டி, தம்முடைய கடமையை நிறைவேற்றியிருக்கிறார்கள். நீதியின் முன் எல்லோருமே சமம் எனும் ஒளி பொருந்திய உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய நீதித் துறையின் பணி இந்திய ஜனநாயகத்தின் மீதான கம்பீரத்தை மேலும் ஒருபடி உயர்த்தியிருக்கிறது. எப்போதும் வாய்மையே வெல்லட்டும்!