தலையங்கம்

கோடைக் கொடும் வெயில்: உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டிய நேரமிது

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு கேரளம் பெருவெள்ளத்தையும், தமிழகம் கஜா புயலையும் சந்தித்தன. வெள்ளத்தை அடுத்து வரும் ஆண்டில், கடும் வறட்சி ஏற்படும் என்ற அபாயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன சில தனியார் வானிலை ஆய்வு அமைப்புகளின் முன்னறிவிப்புகள். கோடை வறட்சியின்போது குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்து, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடந்துகொண்டிருக்கின்றன.

கோடை காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முதல் பிரச்சினையே குடிநீர்ப் பற்றாக்குறைதான். இப்போதே, இந்தியாவின் ஏறக்குறைய 40% நிலப்பகுதி வறட்சியின் பிடியில் இருக்கிறது. ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவைக் காட்டிலும் குறைவாகப் பொழிந்ததுதான் இந்த மாநிலங்களின் வறட்சிக்குக் காரணம். இம்மாநிலங்களில் மார்ச் மாதத்தின் வழக்கமான மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கே பெய்திருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வழக்கமான மழைப்பொழிவில் 60%-க்கும் குறைவாக இருக்கிறது. மழைப்பொழிவு குறைவானது இந்தியா முழுவதுமே கடும் வறட்சிக்குக் காரணமாக இருக்கிறது.

வறட்சிக் காலங்களைச் சமாளிப்பதில் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. வானிலையைப் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டும். கோடை வெயிலைப் பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் உண்டாக்க வேண்டும். நண்பகல் பயணங்களைத் தவிர்க்க வேண்டும், வெப்பக் கதிர்வீச்சிலிருந்து தற்காத்துக்கொள்ள தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை மக்களிடம் கொண்டுசெல்வது அவசியமானது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் பெரும் தேக்கநிலை உருவாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தற்போது மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் பணிகள் முடிந்த பிறகாவது, அவர்கள் கோடையின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டில் பருவமழை பொய்த்தால் வறட்சி மேலும் தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எதிர்பாராத பருவமழையொன்றால்தான் வறட்சியைத் தடுக்க முடியும். வறட்சி நீடித்தால் ஊரக வேலைவாய்ப்புகள் முடங்கிப்போகும். அதன் தொடர்ச்சியாக, பொருளாதாரமும் நிலைகுலையும். இந்த அபாயத்திலிருந்து மீள்வதற்கான ஆயத்தங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT