தலையங்கம்

பயங்கரவாதத்துக்கு எதிரான கரங்கள் உறுதியாக ஒன்றுசேரட்டும்!

செய்திப்பிரிவு

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2009-ல் முடிவுக்குவந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு இலங்கை மீண்டும் பாதுகாப்பும் அமைதியும் அற்ற சூழலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கால் நூற்றாண்டு காலமாக அமைதியின்மையால் நிலைகுலைந்திருந்த சூழலிலிருந்து நாடு மீண்டுவரும் நேரத்தில் ஒரு பேரிடியைச் சந்தித்திருக்கிறது.

ஈஸ்டர் தினத்தன்று அதிகம் பேர் கூடும் இடங்களாகத் தேர்ந்தெடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தலைநகரில் கடற்கரையோரமாக அமைந்துள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலைச் சிற்றுண்டி உண்ணும் நேரத்திலும் கொழும்பு, நீர்க்கொழும்பு மற்றும் பாட்டிகோலாவில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பிரார்த்தனைகள் நடக்கும் நேரத்திலுமாகக் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. உள்நாட்டில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலும் அதிர்வை ஏற்படுத்தும் நோக்கத்தைச் சதிகாரர்கள் கொண்டிருந்தது அவர்களுடைய இலக்குகளின் வழியே துல்லியமாகிறது.

இலங்கையிலிருந்து வரும் முதல் கட்டத் தகவல்கள், இஸ்லாமிய பயங்கரவாதக் குழு ஒன்றால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்துவதுபோல ஐஎஸ் அமைப்பும் இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் இலங்கைக்குள்ளும் வெளியிலுமாக எந்தெந்த அமைப்புகளெல்லாம் கைகோத்திருக்கின்றனவோ அவ்வளவும் வேரறுக்கப்பட வேண்டும். இந்தக் கொடூரத்தில் 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கான குறைந்தபட்ச நியாயமாக இலங்கை அரசு எடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் நடவடிக்கைகளே அமையும்.

இலங்கையை இன்னொரு இனவாதச் சிக்களுக்குள் இச்சம்பவம் கொண்டுபோய் விட்டுவிடக் கூடாது. பெரும் துயரத்தை மிகுந்த மனமுதிர்ச்சியோடு மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் உறுதியோடு இன்று நிற்கிறார்கள் இலங்கையர்கள். இந்த ஒற்றுமையும் உறுதியும் தொடர வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து அளிக்கப்பட்ட உளவுத் துறை எச்சரிக்கைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசு இந்தச் சூழலில் எந்தவொரு சமூகத்துக்கு எதிராகவும் வதந்திகள் பரவாமல் தடுத்திருப்பது சரியான அணுகுமுறை. இது மேலும் சூழலை மோசமாக்காமல் தடுத்திருக்கிறது.

இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. மனிதகுலம் தன்னைத் தானே நெறிப்படுத்திக்கொள்ளத்தான் மதங்கள். அந்த மதங்களே சக உயிர்களைக் கொல்லும் காரணம் ஆக்கப்படும் என்றால் அதற்கு எதிரான போரில் மத நம்பிக்கையாளர்களே முதல் வரிசையில் நிற்க வேண்டும். பயங்கரவாதத்தைக் கரங்கள் கோத்து முறியடிப்போம்.

SCROLL FOR NEXT