சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பீமா மண்டாவியுடன் நான்கு பாதுகாப்பு ஊழியர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். பஸ்தர் மக்களவைத் தொகுதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தோடுதான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. தேர்தலை ஒத்திவைப்பது குறித்து யோசிக்காமல் வாக்குப்பதிவைக் குறிப்பிட்ட நாளில் நடத்துவது என்ற முடிவைத் தேர்தல் ஆணையம் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், வன்முறை குறித்த பயத்தோடு அல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும்.
சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியைத் தொலைவிலிருந்து இயக்கி, பீமா மண்டாவி இருந்த வாகனத்துக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தை முதலில் தகர்த்திருக்கின்றனர். பிறகு, அந்தச் சாலையின் இரு புறங்களிலும் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள், வாகனங்களில் இருப்பவர்களை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவில் நடத்தி முடிப்பதோடு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும். மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டத்தை உளவுப்பிரிவு முன்கூட்டியே கணிக்கத் தவறியிருக்கலாம் அல்லது காவல் துறை அளித்த எச்சரிக்கையை பாஜகவினர் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கலாம். அரசுத் தரப்பின் தவறு இது. எனினும், வன்முறைப் பாதையை இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதன் மூலம் எதைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர் மாவோயிஸ்ட்டுகள்? எப்படியும் நாட்டு மக்களிடம் அவர்கள் மீது மிச்ச மீதி இருக்கும் பரிவையும் தங்கள் வன்முறை வழியே இழந்துகொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உறுதி.
சத்தீஸ்கரின் 11 மக்களவைத் தொகுதிகளில் 160 பேர் களத்தில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் துணைநிலை ராணுவப் படையினரிடம் விடப்பட்டிருக்கிறது. மாநிலக் காவல் துறையும் இதில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பதையே இத்தாக்குதல் குறிப்புணர்த்துகிறது.
மாவோயிஸ்ட்டுகளின் தீவிரவாதப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை. ஆனால், வனங்களில் வசிக்கும் மக்களை அவர்களுடைய நிலங்களை விட்டு வெளியேற்றுவதும் சுரண்டுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரமே தீர்வுகாண வேண்டும். வனங்களில் கிடைக்கும் கனிம வளங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தித் தொழில் நிறுவனங்களுக்கு அளிப்பதும் தடுக்கப்பட வேண்டும். அதற்காக, வனங்களிலிருந்து வனவாசிகளை அகற்றுவது குறித்து யோசிக்கக் கூடாது. வனவாசிகளின் உதவியுடன்தான் மாவோயிஸ்ட்டுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியம்.