இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராகிறார் பெஞ்சமின் நேதான்யாகு. ஊழல் புகார்களுக்கு ஆளான நேதான்யாகு, பலத்த போட்டிக்குப் பிறகுதான் வென்றிருக்கிறார். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். இதைத் தவிர்க்க, பிற வலதுசாரிக் கட்சிகளுடன் அவர் சமரசம் காண முற்படுவார். அப்போது, மேற்குக் கரையில் இஸ்ரேல் ஏற்படுத்திய யூதக் குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேலிய நிலப் பகுதியுடன் சேர்த்துக்கொண்டுவிட வேண்டும் என்று அக்கட்சிகள் நிபந்தனை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாலஸ்தீனப் பகுதியில் ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்.
இந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் பரவலான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட ‘புளூ அண்ட் ஒயிட்’ கட்சி, நேதான்யாகுவின் லிகுட் கட்சிக்கு (36) அடுத்த இடத்தை (35) பிடித்துள்ளது. இது நேதான்யாகுவின் பதவிக்குப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பழமைவாத யூதக் கட்சிகளான ஷாஸ், ஐக்கிய தோரா யூதவியம் ஆகிய கட்சிகள் தலா எட்டு தொகுதிகளில் வென்றுள்ளன. வலதுசாரிக் கட்சிகளின் சங்கம், இஸ்ரேல் பேடனு என்ற வலதுசாரிக் கட்சிகள் தலா ஐந்து இடங்களில் வென்றுள்ளன. மையவாதக் கட்சி குலானு நான்கு தொகுதிகளில் வென்றுள்ளது. இவை நேதான்யாகுவுக்கு ஆதரவு தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான வார்த்தைகளுக்குப் பேர்போனவரான நேதான்யாகு, தேர்தல் பிரச்சாரத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அபாயகரமான அதி தீவிர தேசியத்தைத் தன் ஆயுதமாகப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அரபுகளுக்கு எதிரான, இனவாதக் கட்சியான ‘யூத சக்தி’ என்ற தீவிர வலதுசாரியுடன் அவர் வெளிப்படையாகவே கூட்டணி கண்டார். “நான் பதவியில் இருக்கும் வரை பாலஸ்தீன அரசு அமையாது” என்று 2015 தேர்தலின்போது பேசிய நேதான்யாகு, “மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசால் உருவாக்கப்பட்ட யூதக் குடியிருப்புகள் இஸ்ரேலிய இறையாண்மைக்குள் கொண்டுவரப்படும்” என்று இம்முறை அறிவித்தார். “பாலஸ்தீன பயங்கரவாதிகளிடமிருந்து உங்களை என்னால்தான் காப்பாற்ற முடியும்” என்றும் பேசினார்.
ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்கீகரித்ததற்கும், அதன் தூதரகம் அங்கு மாற்றப்பட்டதற்கும் நேதான்யாகுவின் செயல்பாடுகளே காரணம். ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுப் பகுதியையும் இஸ்ரேலின் பிரதேசமாக டிரம்ப் அங்கீகரித்ததற்கும் நேதான்யாகுவுக்கு அவரிடம் இருக்கும் செல்வாக்கே காரணம் என்று விமர்சிக்கப் படுகிறது. இப்படியான சூழலில், நேதான்யாகுவே மீண்டும் இஸ்ரேல் பிரதமராவது, பாலஸ்தீனத்தில் அமைதி திரும்பும் எனும் நம்பிக்கையைத் தளரச் செய்திருக்கிறது!