ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக, ‘தி ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட விமர்சனக் கட்டுரைக்காக, அதன் ஆசிரியர், பதிப்பாளர் இருவருக்கும் மேகாலய உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை கருத்துச் சுதந்திரத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தத் தண்டனைக்குத் தடை உத்தரவு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். முன்னதாக அந்நாளிதழுக்கு மேகாலய நீதிமன்றம் விதித்த அபராதம், அதைக் கட்டத் தவறினால், சிறைத் தண்டனை, பத்திரிகைக்குத் தடை போன்ற உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில வசதிகளை, சமீபத்தில் மேகாலய அரசு விலக்கிக்கொண்டுவிட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு இரண்டு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, நீதிமன்றம் தானாகவே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது. ‘ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வீட்டு வேலைகளுக்கு உதவியாளரை நியமிக்க வேண்டும்; ரூ.80,000 மதிப்புள்ள அலைபேசி வழங்க வேண்டும்’ என்றெல்லாம் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இச்செய்தியைப் பிரசுரித்த ‘தி ஷில்லாங் டைம்ஸ்’, இது தொடர்பான விமர்சனத்தையும் முன்வைத்திருந்தது.
இதையடுத்து அந்நாளிதழ் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுத்தது நீதிமன்றம். ஆசிரியர் பேட்ரிஷியா முகிம், பதிப்பாளர் ஷோபா சவுத்ரி ஆகிய இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், ‘இருவரும் நீதிமன்ற அறையில் மூலையில் அமர்ந்திருக்க வேண்டும்; ஒரு வாரத்தில் அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனை; நாளிதழ் தடைசெய்யப்படும்’ என்று தண்டனை விதித்தது. இந்நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து ‘தி ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளிதழுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதித்ததுடன் மேகாலய நீதிமன்றப் பதிவாளருக்கு இது தொடர்பாக நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை மிக அபூர்வமாகவும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே பரிசீலிப்பது உயர் நீதிமன்றங்களின் பெருமையைக் கூட்டும். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை நீதிமன்றங்களும் பறிக்கப் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடக் கூடாது. 1999-ல் இதுபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றம் அத்தகைய அவதூறு கருத்துகளை லட்சியம் செய்யாமல் புறந்தள்ளியதை மறந்துவிடக் கூடாது. விருப்பு, வெறுப்பற்ற நீதித் துறைக்குக் கோபமல்ல - தாராளவாத அருங்குணமே அவசியம்!