தலையங்கம்

சந்தா கோச்சர் விவகாரம்: விழிப்புடன் இருக்க வேண்டும்!

செய்திப்பிரிவு

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சர் மீதான புகார்களை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, தனது பதவிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கோச்சர் நடக்கவில்லை என்று 8 மாத விசாரணைக்குப் பிறகு அறிக்கை தந்திருக்கிறார். இந்தியத் தொழில் துறையில் தலைமை நிர்வாகியாகப் பெண்கள் வருவது அரிய சம்பவம் என்பதால், இளம் பெண்களுக்கு அவர் முன்மாதிரியாக உதாரணம் காட்டிப் போற்றப்பட்டார். எனவே, இந்த விவகாரம் ஏராளமானோருக்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது.

சந்தா, அவருடைய கணவர் தீபக் கோச்சர், அவருடைய நண்பரும் விடியோகான் தொழில் குழுமத் தலைவருமான வேணுகோபால் தூத் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகிகள் ஆகியோருக்கு எதிராக, மத்தியப் புலனாய்வுத் துறை கடந்த வாரம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்திருக்கிறது. விடியோகான் தொழில் குழுமத்துடன் தீபக் கோச்சருக்கு இருந்த உறவை வங்கியின் மூத்த நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் சந்தா கோச்சர் தெரிவிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவருகிறது. விடியோகான் குழுமத்துக்கு ரூ.300 கோடி கடன் கொடுத்த அடுத்த நாளே தீபக் கோச்சரின் ‘நுபவர் ரிநியூவபள்ஸ்’ நிறுவனத்துக்கு ரூ.64 கோடி கொடுக்கப்பட்டது தற்செயலா, லஞ்சமா, தரகா என்பதெல்லாம் இனிமேல்தான் விசாரணையில் தெரியவரும். ஐசிஐசிஐ வங்கி, விடியோகான் குழுமத்துக்கு விதிகளை மீறியும் கடன்களை வழங்கியிருக்கிறது. இந்த வகையில், வங்கிக்கு மொத்தமாக ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

கடனைப் பெறுபவர் தங்களுடைய குடும்ப நண்பர் என்பதால், கடன் மனு பரிசீலனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி சந்தா கோச்சர் விலகியிருக்க வேண்டும். அத்துடன், அந்நிறுவனத்தின் வாராக்கடன் விவகாரத்தை உடனடியாக பிற அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கடனை வசூலிக்க முயற்சி எடுத்திருக்க வேண்டும். வங்கியின் நடத்தை நெறியை மீறிய அவர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைச் சிதைத்திருக்கிறார். கடந்த அக்டோபரில், அவர் தானாகவே பதவி விலகவில்லை, பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2009 ஏப்ரல் முதல் அவருக்களித்த போனஸ் தொகையைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்குத் தராமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை முழுதாக ரத்துசெய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் வங்கியின் பங்குகளை வாங்கிக்கொள்ள அவருக்கிருந்த உரிமைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடுமையான தண்டனைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு நடந்தும் சந்தா கோச்சரை விசாரித்துவிட்டு, அவர் மீது குற்றம் ஏதும் இல்லை என்று வங்கியின் தலைமை நிர்வாகக் குழு எப்படி நற்சான்று அளித்தது? மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் வெவ்வேறு விதங்களில் மோசடிகளும் ஊழல்களும் அரங்கேறிவருகின்றன. ஐசிஐசிஐ வங்கி விவகாரம் அதில் ஒன்று. நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

SCROLL FOR NEXT