தலையங்கம்

கேபிள் டிவி கட்டணக் குறைப்பு: வரவேற்கத்தக்க முடிவு!

செய்திப்பிரிவு

கேபிள் மூலம் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நிறுவனங்கள் மக்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும், சேனல்களைத் தேர்ந்தெடுக்க நுகர்வோர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தியும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்புக்குரியது. இதனால் கட்டணங்கள் குறைந்திருப்பது பாராட்டுக்குரியது.

கட்டண சேனல்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயித்திருப்பது, நுகர்வோர் நலனில் அக்கறையுள்ள செயலாகும். இந்தக் கட்டண விகிதங்களையும் இலவச சேனல்கள் எவை, கட்டண சேனல்கள் எவை, கட்டணம் எவ்வளவு என்ற விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி நிறுவனங்களே தெரிவித்தாக வேண்டும். விரும்பும் சேனல்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நுகர்வோர்களுக்குக் கிடைத்துள்ளது. உள்ளூரில் விளம்பர வருமானத்துக்காகத் தொடங்கப்படும் சேனல்களையும் எண்ணிக்கையில் சேர்த்து அதை நுகர்வோர்கள் தலையில் சுமத்தும் கேபிள் டிவி உரிமையாளர்களின் செயலுக்குக் கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. தங்களுடைய வசதிக்கேற்ப அல்லது வருமானத்துக்காக சேனல்களை ஒரு தொகுப்பில் சேர்க்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இணையத்தின் வருகைக்குப் பிறகு, கேபிள் இணைப்பு மூலம்தான் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது. இந்தியாவில் 19.70 கோடி வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. மேலும், 10 கோடி வீடுகளில் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே ஒளிபரப்பாளர்கள், நுகர்வோர் இருதரப்பாருக்கும் திருப்தியும் பயனும் கிட்டும் வகையில் ஒழுங்குபடுத்துவது டிராயின் கடமையாகிவிட்டது. இனி வரும் காலங்களில் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப யாரும் அதிகக் கட்டணத்தை நிர்ணயிக்கவோ, நுகர்வோரைச் சுரண்டவோ முடியாது. இதை ஒளிபரப்புத் தொழிலில் உள்ளவர்களும் வரவேற்பதே நல்லது.

பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டிய புதிய நடைமுறையில், நுகர்வோர் தாங்கள் விரும்பும் சேனல்களை மட்டும் பார்ப்பதற்கு வழி ஏற்பட்டிருக்கிறது. கட்டண சேனல்கள் அதிகபட்சம் எவ்வளவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த சேனல், எவ்வளவு சேனல்கள் என்பதெல்லாம் இனி நுகர்வோரின் விருப்பப்படிதான் வழங்கப்பட வேண்டும். இதற்கு முன்னால் கட்டண சேனல்களையும் இலவச சேனல்களையும் வழங்குவது பற்றி விநியோகிப்பவர் அல்லது ஒளிபரப்புபவர்தான் தீர்மானித்தனர். நாம் விரும்பாத சேனல்களையும் சேர்த்துத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

நுகர்வோரிடையே அதிக வரவேற்பைப் பெறுகிறது என்பதற்காக சேனலின் கட்டணத்தை விருப்பப்படி உயர்த்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கேபிள் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஏற்படும் தடைகள் குறித்து ஆராய்வதாகவும் தரமான நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பாவதை உறுதி செய்யப் போவதாகவும் டிராய் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. கேபிள் டிவி கட்டண சேனல்களுக்கு சேவை வரி விதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலனையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT