தலையங்கம்

மேகாலயச் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் மீதான அக்கறையின்மையின் விளைவு

செய்திப்பிரிவு

மேகாலயத்தின் கிழக்கு ஜயந்தியா குன்றுப் பகுதியில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த விபத்தின் அதிர்வுகள், வாரங்களைத் தாண்டியும் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. 2018 டிசம்பர் 13-ல் நிகழ்ந்த இந்த விபத்தில் உரிய மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத மேகாலய அரசை உச்ச நீதிமன்றமே கண்டித்த பிறகும் சூழலில் அங்கே பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. இது அம்மாநில அரசின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது. தொழிலாளர் நலனிலும், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் செய்வதிலும் மத்திய அரசுக்கும் மேகாலய மாநில அரசுக்கும் உள்ள அக்கறையின்மையைப் பறைசாற்றுகிறது.

தொழிலாளர்களை மீட்க உற்ற கருவிகளும், திட்டமும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் அரசுகள் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இதே இடத்தின் வேறொரு பகுதியில் நடந்த சுரங்க விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விபத்துக்குப் பிறகு, சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கங்கள் நடப்பது பற்றி மேகாலய அரசு தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால், இதற்கான முழுப் பொறுப்பும் மாநில அரசையே சாரும். இந்தச் சட்டவிரோதச் சுரங்கங்களைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது அம்மாநில அரசு செய்த பெரும் தவறு.

நீதிபதி பி.பி.கடோகி தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து, சட்டவிரோத நிலக்கரி வெட்டியெடுப்பு குறித்து அறிக்கை பெற்றது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். தெற்கு காரோ குன்றுப் பகுதியில் 2012-ல் இதே போன்ற சட்டவிரோதச் சுரங்கத்தில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சட்ட விரோதமாக நிலக்கரியை வெட்டி எடுப்பவர்கள் அதைக் கொண்டு செல்லும்போது எல்லா இடங்களுக்கும் கரித்தூள் பரவுவதைத் தடுப்பதில்லை. இதனால் நிலம், நீர், காற்று என்று அனைத்தும் மாசுபடுகிறது. இது சுற்றுச்சூழலை வெகுவாக நாசப்படுத்துகிறது.

‘எலித்துளை சுரங்கம்’ என்று அழைக்கப்படும் இந்தச் சுரங்கங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவு. உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதில் கிடைக்கும் கூடுதல் கூலிக்காகத் தங்களுடைய உயிரைப் பணயம் வைக்கின்றனர் ஏழைத் தொழிலாளர்கள். செயற்கைக்கோள் உதவியுடன் விண்ணிலிருந்து புகைப்படம் எடுத்துப் பார்த்தபோது 24,000-க்கும் மேற்பட்ட துளைகள் தெரிந்துள்ளன.

நிலக்கரி அகழ்வைத் தடுப்பது பிரச்சினைக்குத் தீர்வல்ல என்கிறார் மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா. சட்ட விரோத அகழ்வுகளைத் தடை செய்ய 22 மாநிலங்கள் பணிக் குழுக்களை நியமித்துள்ளன. ஆனால், இவ்விஷயத்தில் மேகாலயம் தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. உயிர் பலி வாங்குகின்ற, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற இந்தச் சுரங்கங்கள் செயல்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் மாநில அரசுதான் ஏற்க வேண்டும். அத்துடன் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் மறுவாழ்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

SCROLL FOR NEXT