தலையங்கம்

விவசாயக் கடன் தள்ளுபடி நிரந்தரத் தீர்வாகுமா?

செய்திப்பிரிவு

நந்தினி விஜயராகவன்

விவசாயத்துக்கும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் அரசு வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்ட நிதியமைப்புகள் தரும் நேரடிக் கடன் தொகையானது 2017 இறுதியில் ரூ.10,48,222 லட்சம் கோடி ஆகும். 2009 மார்ச் இறுதியில் ரூ.3,01,678 லட்சம் கோடியாக இருந்த இந்தத் தொகை, எட்டு ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்கிறது. அரசு வங்கிகள் விவசாயத்துக்கு மட்டும் அளித்து வாராக் கடன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள தொகை 2008 மார்ச்சில் ரூ.9,375 கோடியாக இருந்து, 2017 மார்ச் இறுதியில் ரூ.60,200 கோடியாக உயர்ந்திருக்கிறது.

2017 மார்ச் தரவுகளின்படி விவசாயத்துக்கு அதிகம் கடன் கொடுப்பது அரசுடைமை வங்கிகளே. கடனில் அவற்றின் பங்கு 63.7%.  கூட்டுறவுச் சங்கங்கள் 21.6%, மாநில ஊரக வங்கிகள் 14.6% தருகின்றன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்த புதிய காங்கிரஸ் அரசுகள் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளன. பாஜக தலைமையிலான அசாம் அரசும் கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. இந்த நான்கு மாநிலங்கள் தள்ளுபடி செய்த வங்கிக் கடன் தொகை 14.8% (ரூ.1.55 லட்சம் கோடி).

அரசியல் நோக்கங்கள்

உத்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயக் கடன் தள்ளுபடியை வாக்குறுதியாக அறிவித்த பிரதமர் மோடி, இப்போது அதற்கு எதிராகப் பேசுகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். எட்டு மாநிலங்கள் சேர்ந்து தள்ளுபடி செய்த மொத்த விவசாயக் கடன் ரூ.1.9 லட்சம் கோடி.

இப்படிக் கடன் தள்ளுபடி செய்ய முன்னுதாரணங்கள் இல்லாமல் இல்லை. அத்துடன் தேர்தலில் அரசியல் ஆதாயம் நிச்சயம் கிடைக்கிறது. 2009-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரூ.52,260 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது.

விவசாயிகள் வாங்கும் வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதில்லை. உச்சவரம்பு உண்டு. அத்துடன் வங்கியல்லாத பிற அமைப்புகளிடமிருந்து குறிப்பாக, தனியாரிடம் வாங்கும் கடன்கள் தள்ளுபடியாவதில்லை. இப்படிக் கடன்களைத் தள்ளுபடி செய்வது நல்லதல்ல என்று பொருளாதார அறிஞர்களும் வங்கித் துறையினரும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதற்குப் பின்வரும் காரணங்கள் உள்ளன.

முதலாவது, விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தற்காலிகத் தீர்வுதானே தவிர வேளாண் துறை எதிர்கொள்ளும் எந்த அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்ப்பதில்லை. வங்கியில் கடன் வாங்கியவர்களின் கடன் சுமை மட்டுமே தற்காலிகமாகத் தீரும், தனியாரிடம் வட்டிக்கு வாங்கியவர்களின் கடன் தீராது. கடன் தள்ளுபடியை அமல் செய்வதில் நிர்வாகச் சிக்கல்களும் நிறைய.

இரண்டாவது, இப்படிப்பட்ட கடன் தள்ளுபடிகள் நாட்டின் கடன் வழங்கும் அமைப்புகளின் ஒழுங்கையே சீர்குலைத்துவிடும். வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடனை அரசு தந்துவிடுவதால் வங்கிகளுக்கு இழப்பு இல்லை.

புதிய கடன்களுக்குப் பிரச்சினை

மூன்றாவதாக, புதிதாகக் கடன் கேட்போருக்கு உடனடியாகக் கடன் வழங்க முடிவதில்லை. பழைய கடன்கள் அரசால் அடைக்கப்பட்ட பிறகுதான் வங்கிகள் இருப்பைப் பொறுத்து புதிய கடன்களைப் பரிசீலிக்க முடியும். அரசுகள் சந்தையில் கடன் வாங்கித்தான் இத்தகைய கடன்களை அடைக்கின்றன. இதனால் அரசின் கடன் சுமையும், வட்டிச் செலவும் அதிகரிக்கும். அது அரசின் நிதிப் பற்றாக்குறையையும் அதிகப்படுத்தும். கடன் நிலுவையை அடைக்க பெரும் தொகையை ஒதுக்குவதால் வேளாண் துறையின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமான பாசன வசதிகள், பயிர் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசுகள் குறைத்துக்கொண்டுவிடும்.

கடன் சுமையால் விவசாயிகள் அவதிப்படும்போது அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிச் சுமையை மட்டும் அரசு ஏற்பதும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணையை நீட்டிப்பதும், ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் விவசாயிகளுக்கு நிம்மதியைத் தரும். அதே சமயம் பயிர்களுக்கு காப்பீடு செய்வதை அனைவரும் ஏற்குமாறு செய்தால், பயிர் பொய்த்த இடங்களில் எல்லாம் இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க முடியும். அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, நஷ்ட ஈட்டை விரைவாகப் பெற்றுத் தந்தாலே விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

2017-ல் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த விவசாயக் கடன் ரூ.1.9 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் ரூ.50,000 கோடி சிறியதுதான். மாதாந்திர வருவாயை அளிக்கும்போது அனைத்து விவசாயிகளும் பயனடைவர். கிராமங்களிலும் வங்கிகள் மூலம் கடன் பெறுவது எளிதாகும்.

கடன்பத்திர வெளியீடு

விவசாயக் கடன்களை அடைப்பதற்கான நிதியைத் திரட்டவும் எண்ணெய் நிறுவனங்களுக்கான மானியச் செலவைச் சமாளிக்கவும் கடன் பத்திரங்களை அரசு வெளியிடும் என்று தெரிகிறது. இந்தக் கடன் பத்திரங்களுக்கான வட்டி, கடன் பத்திரம் முதிர்வடையும்போது அசலுடன் சேர்த்துத் தரப்படும். ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள் முதிர்வு காலங்களுடன் இவை வெளியிடப்படும். இதைத் தனியாரும் நிறுவனங்களும் ரொக்கம் செலுத்தி வாங்கிக்கொள்வர். இதற்கான வட்டி, முதிர்வுக் காலத்தில்தான் தரப்படும் என்பதால் உடனடியாக அரசுக்கு வட்டிச் சுமை இருக்காது. இதனால் நிதிப் பற்றாக்குறையையும் எல்லை மீறாமல் காத்துக்கொள்ள முடியும்.

ஆனால், இப்படி இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை, மூன்று ஆண்டுகளுக்கொருமுறை விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது நல்ல நிர்வாகம் அல்ல. இதனால் விவசாயத்துக்கும் நன்மையில்லை, கடன்தரும் வங்கிகளின் நிதி நிர்வாகத்துக்கும் நன்மையில்லை. கடன் வாங்கினால் திருப்பி அடைக்க வேண்டும் என்ற கலாச்சாரமே போய்விடும். பணம் இருக்கும் காலத்தில்கூட, ‘கடன் ரத்து அறிவிப்பு வருகிறதா பார்ப்போம்’ என்ற மனோபாவம் ஏற்பட்டுவிடும்.

என்ன செய்ய வேண்டும்?

விவசாயத்துக்குத் தேவையான பாசன நீர், மின்சாரம், விதைகள், உரங்கள் போன்றவை விலை குறைவாகவும் உரிய நேரத்திலும் போதிய அளவிலும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். விளைச்சல் நன்றாக இருக்கும்போது சந்தையில் விலை வீழ்ச்சியடையாமல், விவசாயிகள் நஷ்டமடையாமல் கொள்முதல் செய்யப்படுவதைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். தானியக் கிடங்குகளும் குளிர்பதனக் கிடங்குகளும் ஏராளமாகத் திறக்கப்பட வேண்டும். 

விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, ஊடு பயிர்ச் சாகுபடி, பயிர் சுழற்சி முறை, கிடைக்கும் நீருக்கேற்ப புன்செய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல் போன்றவற்றுக்கு வழிகாணப்பட வேண்டும். விவசாயிகள் அனைவரும் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது அரசு வங்கிகளில் கடன் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தை அனைவரும் ஏற்கச் செய்ய வேண்டும். கிராமங்களிலிருந்து சந்தைகளுக்கு விளைபொருட்களை எளிதில், செலவு குறைவாக எடுத்துச் செல்ல உதவ வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க, நீர் மேலாண்மையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டால்தான் விவசாயப் பிரச்சினைகள் தீரும். வெறும் கடன் தள்ளுபடி பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது!

பிசினஸ் லைன்.

 தமிழில்: சாரி.

SCROLL FOR NEXT