பாரத ரத்னா விருதுக்கு ஒருவர் தகுதியானவரா, இல்லையா என்ற கேள்விக்கு விடை காண்பது எளிதல்ல. தேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள். கட்சி சார்பு பார்த்துத் தலைவர்களைத் தகுதியானவர்களா, இல்லையா என்று பார்ப்பது தவறு. தேர்தல் ஆதாயம் அல்லது வேறு காரணங்களுக்காக ஒருவரைப் பாராட்டுவதும் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுப்பதும் அரசியல் கண்ணோட்டத்துடனான செயலே. ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டி, பாரத ரத்னா விருதையும் விட்டுவைக்கவில்லை என்பது வருத்தமே.
பல ஆண்டுகளாக சித்தாந்தக் கண்ணோட்டம்தான் பாரத ரத்னா விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்வதற்கான அளவுகோலாக இருந்துவருகிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மறைந்த அசாமியப் பாடகர் பூபேன் ஹசாரிகா, பாரதிய ஜன சங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் ஆகியோரை பாரத ரத்னா விருதுக்குரியவர்களாக அறிவித்திருப்பதற்கு, அவ்விருவரும் அக்கட்சிக்கும் அதன் சித்தாந்தத்துக்கும் நெருக்கமானவர்கள் என்பதே காரணம். முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பங்கு வகித்தவருமான பிரணாப் முகர்ஜிக்கும் விருது அறிவிக்கப்பட்டதுதான் அனைவரையும் சிந்திக்கவும் பேசவும் வைத்துள்ளது.
‘நம் காலத்திய தலைசிறந்த ராஜதந்திரி’ என்று முகர்ஜியைப் பாராட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. முகர்ஜியின் அரசியல் அனுபவமும் நிர்வாகத்துக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால், கடந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு நிகழ்ச்சியில் பேச அவர் ஒப்புக்கொண்டதுதான் பெரும்பாலானவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி, காங்கிரஸ்காரர்களைத் தர்மசங்கடத்தில் நெளியவைத்தது. அரசியலில் முக்கியப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற ஆசை பிரணாப் முகர்ஜிக்கு இருந்தும், அது நேரு குடும்பத்தாரால் தடுக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததுதான்.
1989-ல் தமிழகத் தலைவர் எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தபோது, அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அவரது ஆதரவாளர்களின் ஆதரவைப் பெறும் அரசியல் நோக்கம் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது. 2014 பொதுத் தேர்தல் சமயத்தில், பண்டிட் மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்கப்படுவார் என்று பேசினார் நரேந்திர மோடி. ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்தார். தேர்தலில் அறிவித்துவிட்டு அவரைக் கவுரவிக்க வேண்டுமா என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
பன்மைத்துவம் வாய்ந்த நம் ஜனநாயக நாட்டில் எல்லா பகுதி, எல்லாத் தரப்பு மக்களும் தங்களுடைய ஆதர்ச நாயகர்கள் உரிய மரியாதைகளுடன் கவுரவிக்கப்பட வேண்டும் என்றே விரும்புவார்கள். அத்தகைய கோரிக்கைகளை உரிய கவனம் செலுத்தியும், அவர்களுடைய புகழுக்கு மாசு நேராமலும் அரசு நிறைவேற்ற வேண்டும். அரசியலுக்காக, குறிப்பிட்ட சமூகத்தவரைத் திருப்திப்படுத்த என்ற விமர்சனங்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால், மறைந்த தலைவர்களுக்கு, இறப்புக்குப் பிந்தைய கவுரவமாக இப்படிப்பட்ட விருதுகளைத் தருவதைத் தவிர்த்துவிட வேண்டும்.