தலையங்கம்

இணையவழிக் கொள்கையில் நிதானமான அணுகுமுறை அவசியம்!

செய்திப்பிரிவு

இணையவழி வர்த்தகம் (இ-காமர்ஸ்) தொடர்பான கொள்கையில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள், வெளிநாட்டு முதலீடுகளையும், இந்தியர்களுக்குக் கிடைத்துவரும் வேலைவாய்ப்புகளையும் கணிசமாகக் குறைத்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன. வர்த்தகக் கொள்கையில் அடிக்கடி மாற்றம் செய்யும் இந்திய அரசை நம்பி முதலீடு செய்ய முடியுமா என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலாக இருக்கும் சந்தேகத்துக்கு இந்தப் புதிய விதிகள் வலு சேர்க்கவே செய்கின்றன.

இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில், இணையவழி வர்த்தகம் தொடர்ந்து விரிவடைந்துவருவது, கடைகளை வைத்து வியாபாரம் செய்வோருக்கு இழப்பை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழலில், அவசரக்கோலத்தில் இந்த மாற்றங்களை அரசு கொண்டுவந்திருக்கிறது. இணையவழி வர்த்தகம் தொடர்பான கொள்கைகளை ஆராய கடந்த ஏப்ரல் மாதம் அரசு ஒரு பணிக் குழுவை நியமித்தது. அதன் பரிந்துரை கிடைப்பதற்கு முன்னரே இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர அவசியமென்ன என்ற கேள்வியும் எழுகிறது.

2019 பிப்ரவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்தியாவில் அதிகம் முதலீடு செய்துள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு இணையவழி வர்த்தக நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை அல்லது தங்களுடைய குழுமங்களின் தயாரிப்புகளைச் சந்தையில் 25%-க்கு மேல் விற்கக் கூடாது. இணையவழி வர்த்தக நிறுவனம், பங்குகளை வாங்கி வைத்துள்ள இதர நிறுவனங்களின் தயாரிப்புகளைக்கூட விற்பதற்கு இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘இணையவழி வர்த்தகத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் நியாயமான – சம வாய்ப்புள்ள களம் அளிக்கப்படும்’ என்ற கொள்கைக்கு இந்த விதி மாற்றம் எந்த வகையில் உதவும் என்று தெரியவில்லை.

‘ஒரு தொழில் நிறுவனம் இன்னொரு தொழில் நிறுவனத்துக்கு விற்பது’ என்ற அடிப்படையில் இணையவழி வர்த்தக நிறுவனங்களில் அந்நிய முதலீடு 100% வரையில்கூட மேற்கொள்ளப்படலாம் என்று 2015 மார்ச்சில் அனுமதி தந்தது அரசு. விற்பனையாளர்கள், நுகர்வோர்களுக்கு இடையில் விற்பனை-கொள்முதலுக்கு உதவவும் அனுமதி தரப்பட்டது. இணையவழி வர்த்தக நிறுவனம் தன்னுடைய சொந்தத் தயாரிப்புகளை விற்கவும், ஒரு தொழில் நிறுவனம் நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்கவும், அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படவில்லை. இதில் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்பட்டன. தற்போது, இனி எந்த இணையவழி வர்த்தக நிறுவனமும் ஒரேயொரு நிறுவனத்தின் பொருளை மட்டும் விற்க முடியாதவாறு விதி திருத்தப்பட்டுள்ளது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கதும்கூட!“தடையற்ற வர்த்தகம்தான் நல்லது, அதன் மூலம்தான் நுகர்வோர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும்” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். மறுபுறம், வெளிநாட்டுத் தொழில், வர்த்தக நிறுவனங்களிடமிருந்து உள்நாட்டுத் தொழில், வர்த்தகங்களைப் பாதுகாப்பதே அரசின் நோக்கமாகவும் இருக்கிறது. நுகர்வோரின் மீதான அக்கறையை உள்நாட்டு வணிகத்திலும் அரசு செலுத்துவது நன்மை விளைவிக்கும். அதேசமயம், இவ்விஷயத்தில் நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றினால்தான் நுகர்வோருக்கு உரிய பலன்கள் சென்றடையும் என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்!

SCROLL FOR NEXT