நடப்பு நிதியாண்டு (2018-19) முடிவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நிர்ணயித்துக்கொண்ட இலக்கை மீறி நிதிப் பற்றாக்குறை ரூ.92,349 கோடிக்கு உயர்ந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. கடந்த நிதியாண்டிலும் இதே நிலை ஏற்பட்ட சூழலில், இந்த முறை ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. மொத்த ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 3.2% ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2017-18-ல் அது 3.5% ஆக அதிகரித்திருக்கிறது.
செலவு வளர்ச்சி வீதம் 10.1% ஆக இருக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உண்மையில், அது 9.1% ஆகத்தான் இருக்கிறது. வளர்ச்சியைத் தூண்டக்கூடிய மூலதனச் செலவு குறைந்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களில் வளர்ச்சியைத் தூண்டும் செலவு, நிர்ணயித்த அளவைவிடக் குறைவாக இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் அரசின் வருவாய்ப் பெருக்க நோக்கத்துக்கும் உதவாது. அரசுக்கு வருவாய் தரும் இனங்கள் கொடுக்கக்கூடிய தரவுகளும் உற்சாகம் தருவதாக இல்லை. நிகர வரி வருவாய் 16.6% ஆக இருந்ததால், கடந்த ஆண்டின் திருத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு அரசின் வருவாய் 14.6% அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருந்தார். நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் வரி வருவாய் இனங்கள் மூலமான வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் - நவம்பர் காலத்துக்கான வருவாய் உயர்வு 8.1% என்றும் நிகர வரி வருவாய் 4.6% என்றும் இருக்கிறது. இது நம்பிக்கை அளிக்கும் விஷயமல்ல.
வரியல்லாத வருவாய் அதிகரித்திருப்பது மட்டுமே ஆறுதல் தரும் ஒரே விஷயம். வரியல்லாத இனங்களில் வருவாய் உயர்வு 31% ஆக உள்ளது. ஆனால், இது அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாயில் ஏழில் ஒரு பங்குதான். எனவே, வரியின வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையை இட்டு நிரப்ப இது போதுமானதல்ல. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், வரிச்சலுகைகள், மானியங்களை வழங்குவது பற்றி அரசு யோசிக்கவே செய்யும். தேர்தல் நேரத்திலாவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கிடைப்பதை அரசியல் என்ற பெயரில் கட்சிகளும், பொருளாதாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்ற பெயரில் பொருளாதார அறிஞர்களும் எதிர்க்க வேண்டியதில்லை. அதேசமயம், கடந்த ஆண்டைப் போலவே இந்தப் பற்றாக்குறை இப்போதும் அதிகமாகிவிடாமல் இருக்க, வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
ஏழு அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்ட அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. ஆனால், இந்தப் பங்கு விற்பனையில் கிடைக்கும் தொகை ரூ.92,199 கோடி பற்றாக்குறையை ஈடுகட்டிவிடாது. பற்றாக்குறை அதிகரிப்பது தனியார் முதலீடு செய்வதைக் குறைத்துவிடும். தனியார் முதலீடு மீண்டும் அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறிகள் இப்போது தெரிய ஆரம்பித்துள்ளன. இதைச் சேதப்படுத்தும் எந்த முடிவையும் அரசு எடுக்கக் கூடாது!