அமெரிக்கா – சீனத்துக்கு இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த வர்த்தகப் போர், சர்வதேச அளவில் விரிவடைந்துவிடுமோ என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், நிலைமை சற்று சுமுகமாகியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் சமீபத்தில் நடந்த ‘ஜி-20’ அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்புக்குப் பிறகு, வர்த்தகப் போரை அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
சீனத்திலிருந்து இறக்குமதியாகும் சூரியஒளி மின்சாரத் தயாரிப்புச் சாதனங்கள், சலவை இயந்திரங்கள் ஆகியவற்றின் மீது ஜூலை மாத இறுதியில் அமெரிக்கா காப்பு வரி விதித்தது. சீனத்தின் அனைத்துப் பொருட்கள் மீதும் அடுத்து வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு சீனத் தரப்பிலிருந்து கடும் எதிர்வினை வந்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ், மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள் போன்றவற்றுக்கு சீனாவும் காப்பு வரி விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, கனடா மீதும் இப்படியான நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியதும், அந்நாடுகள் பதிலடி நடவடிக்கையில் இறங்கியதும் பொருளாதாரப் பதற்றத்தை ஏற்படுத்தின.
தற்போது அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டிருப்பதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரு நாடுகளின் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் சந்தித்து வர்த்தக உறவில் ஏற்பட்ட சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்க்கப் பேச்சு நடத்துவார்கள். அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதும், உள்நாட்டுத் தொழில்நிறுவனங்களுக்கு சீன அரசு அளிக்கும் மானிய உதவி உள்ளிட்ட பணப் பயன்களும் விவாதிக்கப்படும்.
இதற்கிடையில் சீனத்திலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10% என்ற அளவிலிருந்து ஜனவரி 1-ம் தேதி முதல் 25% என்று உயர்த்தும் முடிவை அமெரிக்க அரசு ஒத்திவைக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு ஆண்டுக்குச் சுமார் ரூ.14 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது!
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றுவரவில் ஏற்படும் இடைவெளியைப் பெருமளவு குறைக்க, அமெரிக்காவின் வேளாண் விளைபொருட்களை சீனா அதிகம் வாங்கும். ஒருவேளை, சமரசப் பேச்சு தோல்வியில் முடிந்தால் சீனத்திலிருந்து இறக்குமதியாகும் எல்லாப் பொருட்கள் மீதும் அமெரிக்கா 25% காப்பு வரி விதித்து, அந்தப் பணத்தைப் பொதுப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளும். புதிய காப்புவரி உடனடியாக அமலுக்கு வரும். அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளும்கூட கடந்த அக்டோபரிலேயே அமெரிக்கா விரும்பிய வகையில் வர்த்தக உடன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் சீனாவும் எதிர்பாராத வகையில் திடீரென தற்காலிக உடன்பாட்டுக்கு வரக் காரணம் என்ன என்று தெரியவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் இரு நாடுகளும் பரஸ்பரம் கடந்த ஆண்டு புதிதாக விதித்துக்கொண்ட உயர் காப்பு வரிகளை விலக்கிக்கொள்வது அவசியம். இரு வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் பிற நாடுகளுக்கும் பரவும் அது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவியது. இப்போது அது மாறிவிட்டது. அமெரிக்காவின் உயர் வரி விதிப்பைக் கண்டித்த சீனா, பதிலுக்கு அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த கூடுதல் வரியால் அமெரிக்க நிதிச் சந்தையில் இழப்பு தொடங்கியது. சீனப் பொருளாதாரத்திலும் மந்தநிலை ஏற்பட்டது. இதை இரு நாடுகளின் தலைவர்களும் உணர்ந்திருப்பதால், இதை மேலும் வளர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்றே கணிக்க வேண்டியிருக்கிறது.
உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா, உள்நாட்டுத் தொழில்களைக் காப்பாற்றுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை விலக்க வேண்டும் என்று அமெரிக்கா நிச்சயம் வலியுறுத்தும். அமெரிக்காவிடமிருந்து அதிகம் இறக்குமதி செய்வோம் என்று சீனா உறுதியளித்திருப்பதிலிருந்தே அது பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதேநேரத்தில், அமெரிக்காவின் காப்பு வரிக் கொள்கைகளைச் சீனமும் பதிலுக்குச் சுட்டிக்காட்ட இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரு நாடுகளுமே பேச்சு நடத்தி, சுமுக முடிவு கண்டு வெற்றிபெற்றதாக அறிவிப்பதே உலக வர்த்தகச் சூழலுக்கு நல்லது!