தலையங்கம்

விவசாயிகளின் உரிமைக் குரலை அரசு அலட்சியம் செய்யலாகாது!

செய்திப்பிரிவு

சமீபத்தில் டெல்லியை உலுக்கிய விவசாயிகள் பேரணி, விவசாயிகளின் மனக்குமுறலை அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பதுடன் வேளாண் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் வலியுறுத்தியிருக்கிறது. வேளாண் துறை எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று கோரிய விவசாயிகள், விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய உத்தரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த மத்திய சட்டம் தேவை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தமிழகம் உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வாயிலாக ஒன்றுதிரட்டி இந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு. விவசாயிகள், டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒன்றுகூடி போராடியதுடன் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றதன் மூலம் தேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் மஹாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பைக்குப் பேரணியாகச் சென்ற விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆறு மாதங்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருந்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். டெல்லி பேரணியில் கலந்துகொண்ட தமிழக விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாணப் போராட்டம் நடத்தியது அனைவரையும் அதிரவைத்திருக்கிறது. விவசாயிகளின் பேரணிக்கு ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், ஷரத் பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வேளாண் துறையின் வளர்ச்சி வெறும் 3.8%தான். கடந்த காலாண்டில் 5.3% பதிவாகியிருந்தது. பணமதிப்புநீக்க நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கு முன்பாக 2016-17-ன் முதல் மூன்று காலாண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி வலுவானதாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகான எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. விவசாயிகளைப் பணமதிப்புநீக்க நடவடிக்கை கடுமையாகப் பாதித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தண்ணீர் இல்லாமல் காவிரிப் படுகை மாவட்டங்களில் விவசாயிகள் கடும் சவால்களைச் சந்தித்துவந்த நிலையில் கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவு அவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாடு முழுவதும் விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்குப் பிறகும், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அரசு பொருட்படுத்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இன்னும் ஆறு மாதங்களில் மக்களவைத் தேர்தலும் வரவிருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் மிகப் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக விவசாயிகள் போராட்டம் உருக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை அரசு கைவிடுமானால் அதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அரசு அதை உணர்ந்துகொள்ள வேண்டும்!

SCROLL FOR NEXT