பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிப்பதைத் தனது வாழ்நாள் பணியாக ஏற்றுக்கொண்ட நெல் ஜெயராமனின் மறைவு, இயற்கை வேளாண் இயக்கத்துக்குப் பேரிழப்பு. இளம் வயதிலேயே நுகர்வோர் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்ட ஜெயராமன், வேளாண் அறிஞர் நம்மாழ்வாரால் பட்டைதீட்டப்பட்டவர். அவரது வழிகாட்டலில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்கத் தொடங்கிய அவர், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வைத் தமிழகம் முழுவதும் பரப்பியவர். ஒரு விவசாயியின் மரணத்துக்கு ஒட்டுமொத்த மாநிலமும் கலங்கி நிற்கும் அதிசயத்தைச் சாத்தியமாக்கியது தனது வாழ்நாள் முழுவதும் அவர் செய்த மக்கள் பணிகள்தான்!
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நுகர்வோர் நீதிமன்றங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டதன் மூலம் மக்கள் பணியைத் தொடங்கியவர் அவர். அந்த அனுபவங்கள், நஞ்சில்லா உணவு தொடர்பான சிந்தனையை அவரிடம் ஏற்படுத்தின. இயற்கை வேளாண்மையை நோக்கி நகரத் தொடங்கிய அவருக்கு நம்மாழ்வாரின் அறிமுகமும் வழிகாட்டலும் கிடைத்தன. நம்மாழ்வார் முன்னெடுத்த வேளாண் இயக்கத்தின் தொடர்ச்சியாக ஜெயராமனின் பணிகள் அமைந்திருந்தன. 2003 தொடங்கி கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடித் தேடிச் சேகரித்தார். 70 நாட்கள் தொடங்கி 200 நாட்கள் வரையில் வெவ்வேறு சாகுபடி காலத்தைக் கொண்ட 174 நெல் ரகங்கள் அவரது தேடுதலில் கண்டெடுக்கப்பட்டன. பாரம்பரிய நெல் ரகங்களை அவரே நட்டு வளர்த்து அதன் தன்மைகளை உறுதிசெய்தார். அதன் பிறகு, அவற்றை 41 ஆயிரம் விவசாயிகளிடம் கொண்டுசேர்த்திருக்கிறார்.
வேளாண்மைப் பல்கலைக்கழகமும் வேளாண் ஆய்வு மையங்களும் செய்ய வேண்டிய பணியைச் செய்து முடித்தவரான ஜெயராமன், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு எளிய விவசாயி. வேளாண் ஆய்வு மையங்கள் சேர்த்துவைத்திருக்கும் நெல் ரகங்கள் ஆய்வுக் கூடங்களில் பாதுகாப்பாகத் தூங்கிக்கொண்டிருக்க, அவற்றைப் பரவலாக விவசாயிகளிடம் கொண்டுபோய்ச் சேர்த்து மரபுக்கு உயிரூட்டியிருக்கிறார். இயற்கை வேளாண்மையை ஒரு இயக்கமாக முன்னெடுத்திருக்கிறார்.
வேளாண்மை என்பது ஆய்வுக் கூடங்களுக்குள்ளேயே முடிந்துபோகிற பரிசோதனைகள் அல்ல. காலநிலையோடு போராடி பயிர்களை நட்டு வளர்த்துக் காக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்வகைகளின் சாதக பாதகங்கள் அனுபவபூர்வமாகத் தெரியும். எனவே, விவசாயிகளையும் இணைத்துக்கொண்டால்தான் வேளாண் ஆய்வுகள் முழுமைபெறும். இனிவரும் காலங்களிலாவது வேளாண் அறிவியல் மையங்கள் தங்களது ஆய்வுப் பணிகளில் விவசாயிகளையும் இணைத்துக்கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். புதிய நெல் ரகங்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டும் வேளாண் ஆய்வறிஞர்கள் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதிலும் காட்ட வேண்டும். மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ப விவசாயிகள் காலம்காலமாய்ப் பயிரிட்டு வந்த நெல் வகைகள், நமது மூதாதையரின் மரபார்ந்த அறிவின் விளைச்சல்கள். அதை அலட்சியம் செய்துவிடக் கூடாது என்பதே நெல் ஜெயராமன் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் செய்தி!