தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதியளித்திருக்கிறது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். இதன் மூலம் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாததாகி இருக்கிறது. ஆனால், “ஆலையை மூடியது மூடியதுதான்” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். “உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.
தொடக்கம் முதலே, ஸ்டெர்லைட் விவகாரத்தைத் தவறான முறையிலேயே தமிழக அரசு கையாண்டுவருகிறது. நாம் கடைப்பிடித்துவரும் மோசமான தொழில் கொள்கையின் விளைவுகளில் ஒன்றாகவே மாநிலத்தில் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பகுதியில் ஒன்றாகியிருக்கிறது தூத்துக்குடி. இதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல; அப்பகுதியில் செயல்பட்டுவரும் பல ஆலைகளும் சேர்ந்தே காரணம் என்றாலும், தொடரும் சூழல் மாசுக்கான எதிர்ப்பின் மையமாக ஸ்டெர்லைட் உருவெடுத்தது. உச்சகட்டமாக நடந்த மே 22 பேரணி, துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதோடு முடிந்தது. இதையடுத்து எழுந்த எதிர்ப்புகளின் நீட்சியாகத் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது; அரசாணையையும் பிறப்பித்தது.
மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உண்மையாகவே ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றால், இந்த அரசாணைக்குப் பதிலாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதை அரசின் கொள்கை முடிவாக அறிவித்திருக்க வேண்டும் என்பதை அப்போதே எதிர்க்கட்சிகளும் சட்ட நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். ‘இந்தத் தடை நிலைக்காது’ என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்காடியபோதும் அதில் தமிழக அரசுத் தரப்பு முழு செயல் திறனுடன் வழக்காடியதுபோலத் தெரியவில்லை. இது மோசமான திசை நோக்கிச் செல்கிறது; தமிழக அரசு இப்போதேனும் சுதாரிக்க வேண்டும் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழும்கூட சுட்டிக்காட்டியது. இப்போது அதுதான் நடந்திருக்கிறது.
ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை தொடர வேண்டும் என்று அரசு விரும்பினால், அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தீவிர நடவடிக்கைகளை அமலாக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் அல்ல; எல்லா ஆலைகளையுமே முறைப்படுத்த வேண்டும். அல்லது ஸ்டெர்லைட் ஆலையை மூட விரும்புகிறது என்றால், அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவாக அதை அறிவிக்க வேண்டும். அப்போதும் தூத்துக்குடியிலுள்ள ஏனைய ஆலைகளையும் முறைப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவது நேர்மையான அணுகுமுறை அல்ல. தொழில் வளர்ச்சியில் காட்டும் அதே கவனத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் காட்ட வேண்டியது ஒரு அரசின் முக்கியமான கடமை. மக்களின் உயிரையும் உடல்நலத்தையும் காப்பாற்றும் தன் கடமையிலிருந்து ஒரு அரசு தவறலாகாது.