தலையங்கம்

அதிகார எல்லைகளை மீறும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

செய்திப்பிரிவு

காஷ்மீரில் புதிய அரசு அமைக்க அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல், சட்ட மன்றத்தை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருப்பது அப்பட்டமான சட்ட விரோதச் செயல். இதன் மூலம் அரசியல் சட்டத்தை மட்டுமல்ல, மரபுகளையும் மீறியிருக்கிறார் ஆளுநர். இதற்கு ஆளுநர் அளித்திருக்கும் விளக்கங்களும் ஏற்கத்தக்கவை அல்ல. மாற்றுக் கட்சி உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க, பெரிய அளவில் குதிரை பேரம் நடந்துவருவதாகவும், சித்தாந்தரீதியாக முரண்படும் கட்சிகள் சேர்ந்து அமைக்கும் ஒரு அரசு நிலையாக இருக்காது என்றும் ஆளுநர் கூறுவது அவருடைய அதிகார வரம்பையும், ஆளுகையையும் மீறும் செயல்!

2006-ல் பிஹார் சட்ட மன்றத்தை அப்போதைய ஆளுநர் பூட்டா சிங் கலைத்தது சட்ட விரோதமானது; உள்நோக்கம் கொண்டது என்று ராமேஷ்வர் பிரசாத் (2006) வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு உருவாகும் கூட்டணிகளை நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை, அது அவருடைய வேலையும் இல்லை. குதிரை பேரம் நடந்தது என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுவதும், ஊழல் செய்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாகக் கூறுவதும் அரசு அமைவதைத் தடுப்பதற்கான காரணங்களாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் அப்போது தெளிவாகக் கூறியதை இங்கு நினைவுகூரலாம்.

பிடிபி-பாஜக கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, ஆறு மாதங்களாக ஆளுநரின் ஆட்சியின் கீழ் இருந்த காஷ்மீர், தற்போது குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்திருக்கிறது. இந்நிலையில் பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் இணைந்து புதிய அரசை அமைப்பது குறித்து ஆலோசித்துவந்த நிலையில், அவசர அவசரமாகச் சட்ட மன்றத்தைக் கலைத்திருக்கிறார் ஆளுநர். அது மட்டுமல்ல, தங்களுக்குப் பெரும்பான்மை வலு இருப்பதாக பிடிபியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கூறவில்லை என்றும், தங்களுக்கு ஆதரவான பேரவை உறுப்பினர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துவரவில்லை என்றும் ஆளுநர் கூறியிருக்கிறார். பெரும்பான்மை வலுவை நிரூபிக்க வேண்டிய இடம் பேரவைதானே தவிர, ஆளுநர் மாளிகை அல்ல. இதை உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப வலியுறுத்திவருகிறது. காஷ்மீர் ஆளுநர் இதையெல்லாம் அறிந்திராதவர் என்று நம்ப முடியவில்லை.

ஏனைய மாநிலங்களைவிட அரசியல்ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது காஷ்மீர். ஏற்கெனவே, பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வரும் ஒரு மாநிலத்தில் இப்படி அதிகார அரசியல் நடத்துவதும், அதற்கு ஆளுநரே தலைமை தாங்குவதும் விபரீத விளைவுகளுக்கே இட்டுச்செல்லும். மத்திய அரசு இதை அலட்சியமாகக் கருதக் கூடாது. ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். ஆளுநரையும் அந்த மாநிலத்திலிருந்து திரும்பப்பெற வேண்டும்.

SCROLL FOR NEXT