மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களின் பல மாதப் போராட்டங்களுக்குப் பிறகு அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. சமூக-பொருளாதார நிலைகளில் முற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு அடுத்த நிலையிலிருக்கும் மராத்தாக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது அதன் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் (எஸ்பிசிசி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் கூறினாலும், தேர்தல் கணக்குகள்தான் இப்போதைய அறிவிப்பின் அடிப்படை. மகாராஷ்டிர அமைச்சரவை இம்முடிவை ஏற்றிருந்தாலும், சட்டப் பேரவையிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளில் மராத்தாக்களுக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் இருப்பதை அசாதாரணமான நிலையாகக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் பட்நவிஸ். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மராத்தாக்களைச் சேர்த்தால் மற்றவர்களின் வாய்ப்புகள் குறையும்; அதற்குத் தீவிர எதிர்விளைவு ஏற்படும் என்பதால் தனிப்பிரிவு யோசிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தாக்களுக்கு 16% இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்தது. மும்பை உயர் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது இங்கு நினைவுகூரத்தக்கது. மாநில அமைச்சரவையின் முடிவு சமூக-பொருளாதாரக் காரணங்களின்பேரில் உண்மையில் எடுக்கப்பட்டதல்ல. மக்கள்தொகையில் கணிசமாக உள்ள மராத்தாக்களின் வாக்குகளைக் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவாகும்.. கல்வியிலும் சமூக முன்னேற்றத்திலும் மராத்தாக்கள் பின்தங்கியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் தரவுகள் ஏதும் கிடையாது. ராஜஸ்தானின் ஜாட்டுகள், குஜராத்தின் படேல்களைப் போல மகாராஷ்டிரத்தின் மராத்தாக்கள் முற்பட்ட வகுப்பினருக்கு அடுத்த இடத்தில் சமூக-பொருளாதார நிலையில் இருப்பவர்கள். இதற்கு முன்பு மூன்று முறை எஸ்பிசிசி தெரிவித்த கருத்துகள் அப்படித்தான் இருந்தன.
2014-ல் மும்பை உயர் நீதிமன்றம் மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்த பிறகு 4 ஆண்டுகளில் அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமடைந்திருக்க முடியாது. எனவே, மீண்டும் இது நீதிமன்ற விசாரணை வரம்புக்கு வந்தால், மறுபடியும் தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். மராத்தாக்கள் விவசாயம் சார்ந்த பணிகளிலேயே அதிகம் ஈடுபடுவதாலும் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியின்றித் தொய்வுற்று இருப்பதாலும் பாதிப்படைகின்றனர். அதற்குத் தீர்வு, ஒட்டுமொத்தமாகக் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும்தான். மராத்தாக்கள் சமூகப் புறக்கணிப்புக்கோ, சுரண்டலுக்கோ ஆளாகும் சமூகமும் அல்ல. அரசியல் செல்வாக்குள்ள சமூகம். அரசு வேலைவாய்ப்பில் அதிகப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது மட்டுமே தனி இடஒதுக்கீட்டுக்கான காரணியாக இருக்க முடியாது.