தலையங்கம்

விதைக்காமல் அறுவடை செய்ய முடியுமா?

செய்திப்பிரிவு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்திய விளையாட்டுத் துறையைப் பற்றிய சில உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன. இரண்டு பிரிவுகளில் மட்டுமே இந்தியாவுக்குப் புதிதாகக் குறிப்பிடத் தக்க வெற்றி கிடைத்திருக்கிறது. அதே வேளையில், வழக்கமான சில பிரிவுகளில் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. வட்டு எறிதலில் கர்நாடகத்தின் விகாஸ் கௌடாவும் இறகுப்பந்து விளையாட்டில் பருபள்ளி காஷ்யப்பும் தங்கம் வென்றிருப்பது பல தசாப்தங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.

கடந்த முறை புதுடெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அதிக அளவில் பதக்கங்கள் பெற்று, இரண்டாவது இடத்துக்கு வந்த இந்தியா, கிளாஸ்கோவில் 5-வது இடத்துக்குச் சரிந்திருப்பது கவலைக்குரியது. ஆனால், நமது நாட்டில் விளையாட்டுப் பயிற்சி களைக் கவனித்துவந்தவர்களுக்கு இதில் வியப்பு ஏற்பட்டிருக்காது. பளு தூக்குதல், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் ஆகிய பிரிவுகளில் பதக்க வேட்டை நடந்திருக்கிறது. வேலூரைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கப் பதக்கம் பெற்று புகழ் சேர்த்திருக்கிறார். தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் ஸ்குவாஷ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

தமிழக வீரர்களின் பங்கேற்பும் பதக்க வேட்டையும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தடகள வீரர்களும் திறமையைக் காட்டியதால் நம்முடைய மொத்தப் பதக்க எண்ணிக்கை 101 ஆக இருந்தது. ஆனால், தற்போதைய மொத்தப் பதக்க எண்ணிக்கையோ 61-தான். விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சரிவுக்கு அரசியல்வாதிகள், விளையாட்டுத் துறை அதிகாரிகள், கல்வித் துறை, பள்ளிகள், பெற்றோர்கள் என்று பலரையும் காரணமாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒருவர் சுய முயற்சியில் விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டு, பயிற்சிசெய்து தன்னை நிரூபித்துக்கொண்ட பிறகு, பரிசு வழங்குவதும் பாராட்டுவதுமே நம் வழக்கம். இளம் வயதிலேயே ஒருவருடைய விளையாட்டுத் திறமையை இனம்கண்டு, அவருக்கு உரிய பயிற்சிகளையும் ஊக்கத்தையும் அரசுகள் தருவது மிகவும் குறைவு. அப்படி இருக்கும்போது, ஒலிம்பிக்கில் சாதிக்கவில்லை, காமன்வெல்த்தில் ஜொலிக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?

இனியாவது, மிக இளம் வயதிலேயே விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய படிப்புச் செலவையும் பயிற்சிச் செலவையும் அரசே முழுக்க ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தயார்ப்படுத்துவதுடன் அவர்களுக்கு நிரந்தர வேலை தந்து ஊக்குவிக்க வேண்டும். விடுதி வசதியுடன் கூடிய விளையாட்டுப் பள்ளிகளும் விளையாட்டுக் கல்லூரிகளும் ஏற்படுத்தப்படுவதுடன் மாணவர்களுக்குத் தரமான உணவு, கல்வி, உதவித்தொகைகளும் வழங்கப்பட வேண்டும்.

மதிப்பெண் இயந்திரங்களாக இருக்க வேண்டிய மாணவர்களுக்கு, விளையாட்டுத் திறமைகளெல்லாம் தேவை இல்லாதவை என்றே பெரும்பாலான பள்ளிகளும் பெற்றோர்களும் நம்புகின்றனர். இந்த நிலையை மாற்றி, மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அவற்றில் அவர்கள் உயர் நிலையை அடைய அரசும் பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும். பதக்கங்களெல்லாம் ஒரே நாளில் கிடைத்துவிடாது. அவற்றுக்குப் பின்னால் பெரும் திறமையும் உழைப்பும் ஊக்குவிப்பும் இருக்க வேண்டும். எதையும் விதைக்காமல் அறுவடை செய்ய முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

SCROLL FOR NEXT