கடனை அடைக்காமல் ஏய்க்கும் கடன்தாரர்களின் பட்டியலை, நவம்பர் 16-க்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையர் கெடு விதித்திருந்த நிலையில், நவம்பர் 26 வரை அவகாசம் கேட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏற்கெனவே, நிதியமைச்சகத்துடன் மோதலைச் சந்தித்துவரும் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய தகவல் ஆணையம் எழுப்பியிருக்கும் இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப்போகிறது எனும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது.
‘வேண்டுமென்றே கடனை அடைக்காமல் ஏய்க்கும் கடன்தாரர்களின் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குக் கீழ்ப்படியாத உங்கள் மீது ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். நவம்பர் 16 வரை அதற்குக் கெடுவும் விதிக்கப்பட்டது.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால் அதிகரிக்கும் ‘வாராக் கடன்கள்’ வங்கிகளின் செயல்பாடுகளுக்குப் பெருத்த தடையாகத் தொடர்கின்றன. 2017 செப்டம்பரில் வங்கிகள் அளித்த மொத்தக் கடனில் 10.2% வாராக் கடன். அது 2018 மார்ச் 31-ல் 11.6% ஆக உயர்ந்திருக்கிறது. வாராக் கடன் பிரச்சினையை நன்கு உணர்ந்திருக்கும் ரிசர்வ் வங்கி, அரசுடைமை வங்கிகள் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது. அதேசமயம், அதிகத் தொகை கடன் நிலுவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடைய பெயர்களை வெளியிடுவது, வாடிக்கையாளர்களுடனான உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தயங்குகிறது.
ரிசர்வ் வங்கியை மட்டுமல்ல நிதி அமைச்சகத்தையும் மத்திய தகவல் ஆணையம் இவ்விஷயத்தில் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. கடனை வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாதவர்களிடம் வசூலிக்க எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் அல்லது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை ஏன் விளக்கக் கூடாது என்று அது கேட்டுள்ளது.
கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே செலுத்தாதவர்கள் என்று அடையாளம் காணப்படுவோரின் பெயர்களும் அதில் இடம்பெறும். வங்கிகளில் ரூ.1,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களையாவது ரிசர்வ் வங்கி முதலில் தர வேண்டும். வங்கிகளில் பணம் போடும் முதலீட்டாளர்களின் நலனையும் வங்கித் துறையின் வளர்ச்சியையும் பொருளாதார நலனையும் உறுதிசெய்ய வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதை ரிசர்வ் வங்கி எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்!