தலையங்கம்

பத்திரிகையாளர் கஷோகி மரணம்: உண்மை வெளிவர வேண்டும்

செய்திப்பிரிவு

சவுதி அரேபிய அரசை விமர்சித்து எழுதிவந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொலைசெய்யப்பட்டுள்ளது கருத்துரிமையின் மீதான அடுத்த தாக்குதல். கஷோகி சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு தொடர்ந்து கூறிவந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் வாய் திறக்காமல் இருந்த சவுதி அரசு, கடைசியாக உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் சவுதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்துக் கட்டுரை எழுதியதால், சவுதி அரசின் கோபத்துக்கு ஆளானவர் கஷோகி. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சென்றதற்குப் பின்னர்தான் காணாமல் போனார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம்; இந்தக் கொலையில் சவுதி தூதரகத்துக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தொடக்கத்திலேயே எழுந்தன. ஆரம்பத்தில் இதை மறுத்துவந்த சவுதி அரசு, ஒருகட்டத்தில் தூதரகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் கஷோகி இறந்துவிட்டதாகக் கூறியது. தொடர்ந்து, கஷோகியின் உடல் பாகங்கள் இஸ்தான்புல்லில் சவுதி தூதரகப் பொதுச் செயலாளர் இல்லத்தின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்க ஊடகங்களும், அரசும் உலகெங்கும் உள்ள ஜனநாயகக் குரல்களும் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக இப்போது, “இந்தச் சம்பவம் தொடர்பாக 18 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்; ஐந்து மூத்த அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்” என்று சவுதி அரசு கூறுகிறது. எனினும், “இந்தச் சம்பவம் மிக மோசமான முறையில் மூடி மறைக்கப்பட்டது” என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றுதான் உண்மை. சவுதிக்கு அவ்வளவாக நட்பு நாடாக இல்லாத துருக்கியின் தலைநகரில் உள்ள தூதரகத்தில், மேலிடத்து ஆசி இல்லாமல் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் பலரும். தூதரகத்துக்கு வந்த கஷோகியைப் பலர் சூழ்ந்துகொண்டு சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதாகவும், உடலை முழுதாக விட்டுவைக்காமல் கண்டதுண்டமாக வெட்டிவிட்டதாகவும் கூறும் துருக்கி அரசு, இதை நிரூபிக்கத் தங்களிடம் குரல் பதிவுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது இங்கே நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

உலகெங்கும் பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், படுகொலைகளுக்கு உதாரணமாகவும் இந்தச் சம்பவத்தைப் பார்க்க முடிகிறது. இந்த விவகாரத்தை மூடிமறைக்கப் பார்த்த சவுதி அரசு உண்மையைச் சொல்லும் என்று இனியும் எதிர்பார்க்க முடியாது. அதன் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை. சவுதி அரேபியாவுடன் தனி உறவு வைத்துள்ள அமெரிக்கா, தனது சொந்தப் பொருளாதார, ராஜீய நலன்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தக் கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை ஏற்பட உதவ வேண்டும். கஷோகி கொலையாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை, இனி இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருக்க வழிவகுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT