சமகாலத் தமிழக அரசியலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்பட்ட, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கின் இறுதித் தீர்ப்பு, அரசியல் நிச்சயமற்றதன்மைக்குத் தற்காலிகமாகவேனும் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. உடனடியாகப் பெரிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருத முடியாது என்றாலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சட்ட மன்ற உறுப்பினர்கள் இல்லாமல் முடங்கியிருக்கும் தொகுதிகளுக்கு, இனிமேலாவது தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர்களின் மறைவால் அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதால், மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2017 ஆகஸ்ட் 22-ல் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்கள் 19 பேர், முதல்வருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகத் தெரிவித்தனர். விளக்கம் கேட்டு அதிமுக கொறடா ராஜேந்திரன் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஜக்கையன் எனும் உறுப்பினர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட நிலையில், மற்ற 18 உறுப்பினர்களும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அவர்கள் அணுகிய நிலையில், இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்.
ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால், அது குதிரை பேரங்களுக்கு வழிவகுத்திருக்கும். அந்த அபாயத்தைத் தவிர்த்திருப்பது இத்தீர்ப்பின் முக்கிய விளைவு. சமகால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் வாய்ப்பை மக்கள் கைகளுக்குக் கொண்டுசென்றிருப்பது, இத்தீர்ப்பின் இன்னொரு நல்ல அம்சம். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழலில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சவால் முதல்வர் பழனிசாமிக்கு உருவாகியிருக்கிறது. அதிமுக தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று பேசிவரும் தினகரனுக்கும் இது நெருக்கடிதான். 20 தொகுதிகளிலும் வெல்லும்பட்சத்தில் சட்ட மன்றத்தில் திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கச் சாத்தியம் இருக்கிறது எனும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இது ஒரு சவால்தான். ஆக, ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின் எதிர்கால அரசியல் சக்திகளைத் தீர்மானிக்கும் தேர்தலாக அது அமையும்.
20 தொகுதிகள் முடங்கியிருப்பது என்பது கிட்டத்தட்ட தமிழகத்தின் 10% பகுதிகள் முடங்கியிருப்பதற்குச் சமம். இந்த அவலநிலை தொடர தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. 2019 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தல்களை நடத்துவது என்பது நல்ல யோசனை அல்ல. தேர்தல் ஆணையம் விரைந்து எடுக்கும் முடிவையே தமிழக மக்கள் இப்போது எதிர்பார்த்திருக்கிறார்கள்.