தலையங்கம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்குத் துணை நிற்போம்!

செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் பெருமழையும் விளைவாக உருவாகியிருக்கும் பெருவெள்ளமும் பெரும் சேதத்தை உண்டாக்கியிருக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. எல்லை கடந்து உதவ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் கேரளவாசிகள்.

ஜூன் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தில் வழக்கமாக 1,508.2 மி.மீ. மழை பெய்வது கேரளத்தில் இயல்பானது. இந்த ஆண்டு 15% கூடுதல் மழை பெய்தது. குறிப்பாக, இடுக்கி 41%, பாலக்காடு 38%, கோட்டயம் 35%, எர்ணாகுளம் 33% கூடுதல் மழையை எதிர்கொண்டன. விளைவாக உண்டான வெள்ளத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 60,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். 10,000 கி.மீ. நீளத்துக்கும் மேல் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் சிதைந்திருக்கின்றன. ரூ.8,316 கோடி மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், பயிர் நிலங்கள், மின்சாரக் கட்டமைப்புகள், தகவல்தொடர்புக் கோபுரங்கள், மோட்டார் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் அளவிட முடியாதவை. ஆங்காங்கே கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

1924-க்குப் பிறகான பெரிய வெள்ளமாகக் கருதப்படும் இந்தப் பேரிடர் சூழலில் ஒரு ஆறுதல் என்னவென்றால், மேலாண்மை நடவடிக்கைகளைப் பாராட்டத்தக்க வகையில் முன்னெடுத்துவருகிறது ஆளும் இடதுசாரி அரசு. மத்தியப் பேரிடர் நிவாரணக் குழுக்களும் மாநில காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறையும் உடனடியாகக் களத்தில் இறங்கியதால் உயிரிழப்பு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் பினரயி விஜயனுடன் எல்லா பணிகளிலும் கை கோத்து நிற்கிறார் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ரமேஷ் சென்னித்தலா. இக்கட்டான தருணத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக்கொள்ளும் கேலிக்கூத்து நடக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டு, முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதியுதவியை அறிவித்திருக்கிறார். இந்தத் தொகை போதவே போதாது. கேரளத்துக்கான நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். அதேபோல, இந்தத் தருணத்தில் கேரளத்துக்கு வெளியே இருக்கும் பொது அமைப்புகளும் மக்களும் கேரளத்துக்கு உதவும் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சவாலாக நம் முன் உருவெடுத்துவருகிறது. இதை அந்தந்தப் பிராந்தியங்களின், அந்தந்தக் காலகட்டத்தின் பிரச்சினைகளாகப் பார்ப்பதை விடுத்து அதற்கு உரிய தீவிரத்தோடு அணுக வேண்டிய காலம் இந்திய அரசுக்கு வந்துவிட்டது. நம்முடைய போக்குக்கும் இயற்கையின் போக்குக்கும் உள்ள தொடர்பு ஆராயப்படவில்லை என்றால் நாம் மேலும் மேலும் விலை கொடுப்பவர்களாகவே இருப்போம்.

SCROLL FOR NEXT