சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை உயர்வாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியதாலும் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு இறங்கத் தொடங்கியது. 2017 இறுதி வரை ஒரு டாலருக்கு ரூ.63.84 என்று நிலவிய மதிப்பு, தற்போது 70 ஆகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இச்சூழலை, ஏற்றுமதித் துறையை வளர்த்தெடுக்க நல்ல வாய்ப்பாக இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
துருக்கி நாட்டின் செலாவணியான ‘லிரா’, அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று மதிப்பில் 40% சரிவை இந்த ஆண்டு கண்டது. துருக்கி நாட்டின் நீதி, உள்துறை அமைச்சகங்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் தடை நடவடிக்கைகளை எடுத்தது, அமெரிக்காவில் இறக்குமதியாகும் துருக்கியின் உருக்கு, அலுமினியம் மீதான வரியை இரண்டு மடங்காக உயர்த்தியது ஆகியவை முக்கியக் காரணங்கள். இதன் விளைவாக, உலகின் வெவ்வேறு நாடுகளின் செலாவணிகளின் மாற்று மதிப்பும் சரிந்துவருகின்றன. தென்னாப்பிரிக்காவின் நாணயமான ‘ரேண்ட்’, கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் பல மடங்கு சரிந்தது. இவற்றுடன் ஒப்பிடும்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.68.5லிருந்து ரூ.70 ஆகச் சரிந்தது படுமோசமில்லை.
என்றாலும், விஷயம் தீவிரமானது என்பதில் சந்தேகம் இல்லை. ரூபாயின் மதிப்பு சரிந்ததால் திங்கள்கிழமை சரிந்த பங்குச் சந்தைகள், செவ்வாய்க்கிழமை நிலைப்பட்டன. பணவீக்கத்தால் உள்நாட்டில் ரூபாயின் வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது. இந்தியாவின் உண்மையான மாற்று மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.70 அல்லது ரூ.71 ஆக இருக்கக்கூடும் என்கிறார் அரசின் முன்னாள் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு.
மாற்று மதிப்புச் சரிவுக்கு டிரம்பின் நடவடிக்கைகளே காரணம் என்று மத்திய அரசு தனது செயலற்ற தன்மையை நியாயப்படுத்திவிடவும் முடியாது. கடந்த சில ஆண்டுகளாகத் தங்களுடைய முழுத் திறனுக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்க ஏற்றுமதித் துறைகளால் இயலவில்லை. ஏற்றுமதித் துறைகளுக்கு ஊக்கம் அளிக்க தற்போதைய சூழலை மத்திய அரசு தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவிடம் 40,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது. மொத்த விலை - நுகர்வோர் குறியீட்டெண்கள் ஜூலை மாதம் தளர்ந்துள்ளன. இதனால், ரிசர்வ் வங்கியால் செலாவணி மாற்றுச் சந்தையில் தேவைக்கேற்பத் தலையிட முடியும். உலக நாடுகள் பலவும் ஜப்பானிய யென்னையும், அமெரிக்க டாலரையும் அதிக அளவில் கைவசம் வைத்துக்கொள்ளத் துடிக்கின்றன. கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை மேலும் உயரலாம். இந்தக் காரணங்களால் நெருக்கடி தொடரவும் வாய்ப்பிருக்கிறது. ஏற்றுமதியைப் பெருக்கி பொருளாதார நிலையைச் சரிசெய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.