தலையங்கம்

இந்தியா – பாகிஸ்தான் உறவு வளர வெறும் வார்த்தைகள் போதுமா?

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றிருக்கும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் உறவில் புதிய நம்பிக்கையை விதைக்கும் வகையிலான சில சமிக்ஞைகள் தென்படுகின்றன. இரு தரப்பு உறவை மேம்படுத்தும் விஷயத்தில் இந்தியா ஓரடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் தரப்பில் ஈரடிகள் எடுத்து வைக்கப்படும் என்று இம்ரான் பேசியிருக்கிறார். அவருக்குத் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.

இம்ரானைச் சந்தித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட மட்டையைப் பரிசளித்து வாழ்த்தியிருக்கிறார் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர். நம்பிக்கையூட்டும் இந்தப் போக்குகள் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கு வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது!

பாகிஸ்தானின் முந்தைய பிரதமர்கள் இந்தியாவுடன் நெருக்கம் காட்டிய தருணங்களில் அதைக் கடுமையாக விமர்சித்தவர் இம்ரான். இன்றைக்கு அவரே இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முன்வருகிறார் என்பது நல்ல விஷயம்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்துவதில் இம்ரான் ஆர்வம் காட்டுகிறார். இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் மோடி எழுதிய வாழ்த்துக் கடிதம்; முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் அரசுக் குழுவினர் கலந்துகொண்டது போன்றவை நம்பிக்கை தரும் நடவடிக்கைகள்.

ஆனால், சம்பிரதாயமான இந்த முயற்சிகளைக் காட்டிலும், உறவை மேம்படுத்தும் விஷயத்தில் இரு நாடுகளும் கொண்டிருக்கும் சவால்கள்தான் விரிவாகப் பேசப்பட வேண்டியவை. 2015 டிசம்பரில் பாகிஸ்தானுக்குச் சென்று நவாஸ் ஷெரீபை மோடி சந்தித்த பிறகு பத்தான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதல் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாகிஸ்தானுடனான உறவில் நேரடியான நடவடிக்கைகளில் மோடி இறங்குவார் என்று எதிர்பார்க்க முடியாது.

முதலில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகில் சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிக்கக் கூடாது என்று சர்வதேச நிதி பணிக் குழு கூறியிருப்பதை பாகிஸ்தான் அமல்படுத்தினால், பொருளாதாரத் துறையில் மீட்சியடைய வாய்ப்பு கிடைக்கும்.

பயங்கரவாதிகளுக்கு உதவிகள் அளிப்பது, பயிற்சி தந்து இந்திய எல்லைக்குள் அனுப்புவது போன்றவை நிறுத்தப்பட்டாலே பாகிஸ்தான் மீதான இந்தியர்களின் நல்லெண்ணம் அதிகரிக்கும். இந்தியத் தரப்பிலிருந்தும் துணிச்சலாக  மேலும் சில முன்முயற்சிகளையும் எதிர்பார்க்க முடியும். இஸ்லாமாபாதில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் தான் பங்கேற்பதற்கான நடைமுறைகளில் இந்தியத் தரப்பை அனுமதிக்க மோடியும் நடவடிக்கைகள் எடுப்பார்.

கடந்த ஒரு மாதமாக இரு தலைவர்களும் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துகள் செயல்வடிவம் பெற, காத்திரமான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

SCROLL FOR NEXT