தலையங்கம்

பனை நடுதல் ஒரு புதிய கலாச்சாரத்துக்கு வித்திடட்டும்!

செய்திப்பிரிவு

அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என்றாலே ஃபிளக்ஸ் பேனர்கள், பிரியாணி விருந்துகள் என்றாகிவிட்ட காலத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் பனை மரக்கன்றுகள் நடும் இயக்கமாக நடத்தி கவனம் ஈர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அரசியல் தாண்டி, சமூகக் கலாச்சார வெளியிலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முயற்சி இது. தனது பிறந்த நாள் காலகட்டத்தை ஏதேனும் ஒரு அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவதை திருமாவளவன் தொடர்ந்து செய்துவருகிறார். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட நதிநீர் உரிமை மாநாடு, மதச்சார்பற்ற கட்சிகளின் மாநாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டு ஒரு லட்சம் பனைமரக் கன்றுகளை நடும் இயக்கத்தை அவர் நடத்துகிறார் என்றாலும், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவிலேயே பனை மரங்கள் மிகுந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. மேலும், தமிழ் நிலத்தின் ஆதி அடையாளங்களில் ஒன்றாகவும் பனை திகழ்கிறது. விதை, கிழங்கு, ஓலை, ஈர்க்கு, மட்டை, நார், சாறு, காய், பழம், மரத்தண்டு என்று தன்னுடைய ஒவ்வொரு பாகத்திலும் பயனை வைத்திருக்கும் பனைக்கு நம்முடைய உணவு, மருந்துக் கலாச்சாரத்திலும் முக்கியமான பங்கிருக்கிறது. நுங்கு, வெல்லம், கற்கண்டு ஆகியவை இன்றும் மக்களிடம் நேரடிப் பயன்பாட்டில் இருக்கின்றன. கூரை, விசிறி, துடைப்பம், கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயன்பாடுகளில் அதன் பங்கு குறைந்த வண்ணம் இருக்கிறது. வேளாண் சமூகத்துக்கு இயல்பான ஒரு வருவாய்த் துணையாக இருந்தாலும், தென்னை அளவுக்குப் பனையின் முக்கியத்துவம் நம் சமூகத்தில் உயரவில்லை. விளைவாக, நிறைய இடங்களில் பனை மரங்கள் அழிக்கப்பட்டுவருவதையும் நாம் காண முடிகிறது.

இப்படியான சூழலில் திருமாவளவன் தொடங்கியிருக்கும் பனை நடும் இயக்கம் வெறுமனே மரம் வளர்ப்புப் பணி என்பதாகச் சுருங்கிவிடாமல், மக்களிடம் பனை தொடர்பான விழிப்புணர்வு இயக்கமாகவும் விரிகிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பனை விதைகளை எப்படிச் சேகரிப்பது, அதை நடுவது எப்படி என்று தமிழகம் முழுவதும் உள்ள விசிக பொறுப்பாளர்களை அழைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தியிருப்பதோடு, பனை நடும் பணி நடக்கும் இடங்களில் இதுகுறித்து மக்களிடம் திருமாவளவன் விளக்கியும் பேசுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகிறது. தொண்டர்களோடு தொண்டராகத் தானே முன்னின்று விதைகளைச் சேகரிக்கிறார் திருமாவளவன். பனை மரத்திலிருந்து பழுத்து வீழும் விதைகள் சேகரிக்கப்பட்டு, நீர்நிலைகளின் கரைகளையொட்டியும் ஊன்றப்படுகின்றன.

நீராதாரங்களின் கரைகளைப் பாதுகாக்கும் இயற்கை அரண்களாகவும் பனையைப் பயன்படுத்தும் உத்தி இது. திருமாவளவனின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது. ஏனைய தலைவர்களும் கட்சிகளும் தொடர வேண்டியதும்கூட!

SCROLL FOR NEXT